கிழக்கு முதல்வர் மீதான தடை தொடரும் – பாதுகாப்புச் செயலர்
இலங்கை கடற்படை அதிகாரியை அவமதித்த கிழக்கு மாகாண முதலமைச்சர், நசீர் அகமட் மீது விதிக்கப்பட்டுள்ள கடற்படையின் தடை தொடரும் என்று இலங்கை பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.
சம்பூர் மகாவித்தியாலயத்தில் கடந்த 20ஆம் நாள் நடந்த இந்தச் சம்பவத்தை அடுத்து, முப்படைகளின் முகாம்களுக்குள்ளேயும், கிழக்கு மாகாண முதல்வரை அனுமதிப்பதில்லை என்றும், கிழக்கு முதல்வர் பங்கேற்கும் நிகழ்வுகளை புறக்கணிப்பதென்றும்,இலங்கை பாதுகாப்பு அமைச்சு முடிவெடுத்தது.
இந்த நிலையில், இரண்டு தரப்பினரையும் கருத்துக்கள் எதையும் வெளியிடக் கூடாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருந்தார். இதுகுறித்து கருத்து வெளியிட்ட இலங்கை பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, “கிழக்கு முதலமைச்சர் மீது விதிக்கப்பட்ட கடற்படையின் தடை நீடிக்கிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்பிய பின்னர், இறுதி முடிவு எடுக்கும் வரை இந்த தடை தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.