தமிழர் பிரச்சினைக்கு, இந்த வருடத்திற்குள் தீர்வு கிடைக்காது : சித்தார்த்தன்
தமிழர் பிரச்சினைக்கு, இந்த வருடத்திற்குள் திர்வு கிடைக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தர் கூறிய போதிலும், அதில் தனக்கு நம்பிக்கையில்லை என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட் அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.
புளொட் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலார் சந்திப்பு வவுனியாவில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
‘தமிழ் தேசியக்கூட்டமைப்புக்குள் உள்ள கட்சிகள் எல்லாம் தங்களுடைய கட்சிகளை பலப்படுத்தும் செயற்பாட்டை செய்து வருகின்ற நிலையில், அது தமிழ் தேசியக்கூட்டமைப்பை ஒட்டுமொத்தமாக பலப்படுத்துமா? என்ற பயம் மக்கள் மத்தியிலே ஏற்பட்டுள்ளது.
கூட்டமைப்பில் உள்ள நான்கு கட்சிகளும் ஒற்றுமையாக இல்லாவிட்டால், அரச தரப்பினர் தீர்வில் இருந்து மிக இலகுவாக தப்பிக்கொள்வதற்கும், தமிழர்கள் அதனூடாக பாதிப்படைவதற்குமான நிலைமையை உருவாக்க கூடாது.
எல்லோரும் ஒருமித்த நிலைப்பாட்டை எடுத்து அதனூடாக நகர்வதனூடாகவே, நியாயமான அரசியல் தீர்வை நோக்கி நாம் சரியாக செல்ல முடியும் என நம்புகின்றோம். இந்த அரசோ அல்லது தெற்கு அரசியல் கட்சிகளோ தீர்வை தருவதற்கு தயாராக இருக்கின்றனர் என நான் நம்பவில்லை.
அவர்கள் எமது பிரச்சனையில் பெரிய அக்கறையை காட்டுவதாகவும் நான் நம்பவில்லை. எனவே தமிழ் தேசியக்கூட்டமைப்புக்குள் உள்ள வேறுபாடுகளை அவாகள் சாட்டாக பாயன்படுத்த விடக்கூடாது.’ என்றும் கூறினார்.