புலிகளின் முன்னாள் புலனாய்வுப் பொறுப்பாளர் ஆதவன் மாஸ்டர் கைது
விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பாளார்களில் ஒருவரான, ஆதவன் மாஸ்டர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து தீவிரவாத விசாரணைப் பிரிவினரால், கைது செய்யப்பட்டதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவுக்குப் பயணம் செய்வதற்காக காத்திருந்த போதே இவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ஐயாத்துரை மோகனதாஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட, ஆதவன் மாஸ்டரே, சாவகச்சேரியில் அண்மையில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பான பிரதான சந்தேக நபராக தேடப்பட்டு வந்தவர் என்று தீவிரவாத விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள இவரது வீட்டைச் சோதனையிட்ட போது, அவர் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
போரின் போது, மன்னார் மற்றும் வன்னிப் பிரதேச புலனாய்வுத்துறைப் பொறுப்பாளராக இருந்த ஆதவன் மாஸ்டர், போரின் முடிவில் படையினரிடம் சரணடைந்தார்.
ஒன்றரை மாத புனர்வாழ்வுக்குப் பின்னர், இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்டிருந்தார் என்றும் கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.