ஜெயலலிதாவின் வெற்றி இலங்கைக்கு ஆபத்து – கலாநிதி வசந்த பண்டார
தமிழ்நாட்டில், முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது, இலங்கைக்கு ஆபத்தானது என்று, தேசப்பற்று தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள தேசப்பற்று தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் கலாநிதி வசந்தபண்டார,
‘தமிழ்நாட்டில் அதிகப் பெரும்பான்மை ஆசனங்களை வென்று, ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராகியுள்ளார். தமிழ்நாட்டில் ஏனைய கட்சிகள் பலமிழந்து, ஜெயலலிதாவின் பலம் ஓங்கியுள்ளது. இது சிறிலங்காவுக்கு ஆபத்தானதாக அமையும்.
ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கையில், தாம் வெற்றி பெற்றால் இலங்கையின் வடபகுதியில் வாழும் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையை பெற்றுக்கொடுப்பேன், கச்சதீவை மீட்பேன் என்றெல்லாம் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
இந்த உறுதிமொழிகளை நிறைவேற்ற முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் ஜெயலலிதா அனைத்து முயற்சிகளையும் எடுப்பார். இந்தியப் பிரதமர் மோடி இதனை எதிர்க்கமாட்டார். தனித்து அதிகப்பெரும்பான்மை பெற்ற தமிழ்நாட்டு முதலமைச்சரை பகைத்துக் கொள்வதை மோடி விரும்பமாட்டார்.
எனவே இந்தியாவின் மத்திய அரசின் ஆதரவுடன் ஜெயலலிதா வடபகுதி தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையை பெற்றுக்கொடுக்கும் திட்டங்களை முன்னகர்த்துவார்.சுயநிர்ணய உரிமை கிடைத்த பின்பு தனித்மிழீழம் என்பது தானாகவே உருவெடுக்கும். அதனை தடுக்க முடியாது.
அதேபோன்று சட்டரீதியாக இலங்கைக்குச் சொந்தமான கச்சதீவும் பறிபோகும் ஆபத்தும் உள்ளது. கடந்த காலங்களை விட இந்தியாவின் தலையீடுகள் இங்கு அதிகரிக்கும்.எனவே ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சரானது இலங்கைக்கு ஆபத்தானதாகவே அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.