புதையுண்டவர்களை மீட்கமுடியாத அவலம்..!!
கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க மற்றும் புளத் கொஹுபிட்டிய ஆகிய பிரதேசங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மண்சரிவில் புதையுண்டவர்களில் 28 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் அரநாயக்க பகுதியில் மேலும் 5 பேருடையது என கருதப்படும் உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் காணாமல் போன 147 பேரை தேடும் பணி கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இடம்பெற்றுவருகின்றன. அரநாயக்க பகுதியில் 14 பேரின் சடலங்களும்
புளத்கொஹுபிட்டிய கிராமத்தில் 14 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால் மண்சரிவு ஏற்பட்ட இரண்டு பகுதிகளிலும் மீட்பு பணிகளை முன்னெ டுக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அரநாயக்க மற்றும் புளத்கொஹுபிட்டிய பிரதேசங்களில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் மீட்புப் பணிகள் கடும் சவாலுக்கு உட்பட்டுள்ளன. அரநாயக்க பகுதியில் உள்ள சாமபுர மலையிலிருந்து தொடர்ந்து மண் திட்டுகள் சரிந்து விழுந்துகொண்டிருப்பதால் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். அத்துடன் மினி மண்சரிவு என்று சொல்லக்கூடிய அளவில் சாமபுர மலையிலிருந்து தொடர்ந்து மண் திட்டுகள் சரிந்து விழுந்துகொண்டிருக்கின்றன.
அரநாயக்க பகுதியில் சிரிபுர எலங்கபிட்டிய மற்றும் பல்லேபாகே ஆகிய மூன்று கிராமங்களிலும் நேற்றைய தினம் இராணுவத்தினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து மீட்புப் பணிகளை ஆரம்பித்தனர். இந்நிலையில் நேற்றுக்காலை வேளையில் மழை பெய்ய ஆரம்பித்ததையடுத்து சாமபுர மலையிலிருந்து மண்திட்டுகள் சரிந்து வர ஆரம்பித்தமையினால் இராணுவ வீரர்கள் மீட்புப் பணிகளை நிறுத்தியிருந்தனர்.
பின்னர் மீண்டும் சில மணிநேரத்தில் மழை ஓய்ந்ததும் இராணுவ வீரர்கள் மீட்பு பணிகளை ஆரம்பித்தனர். ஆனால் தொடர்ச்சியாக அங்கு மீட்பு பணிகளை முன்னெடுக்கவில்லை. இந்நிலையில் காணாமல் போயுள்ள144 என்ன நடந்தது என்பது தொடர்பில் மக்கள் அச்சத்துடனேயே உள்ளனர். அரநாயக்க பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 80 வீடுகள் முற்றாக மண்ணில் புதையுண்டுள்ளன.
அரநாயக்க மாவனெல்ல அரநாயக்க பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை மாலை ஏற்பட்ட பாரிய மண்சரிவில் மூன்று கிராமங்களின் 220 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததுடன் மண்சரிவில் சிக்கிய 1100 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிரிபுர எலங்கபிட்டிய மற்றும் பல்லேபாகே ஆகிய கிராமங்களே இவ்வாறு மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளன. சாமபுர என்ற மலையிலிருந்து இவ்வாறு மூன்று கிராமங்களின் மீது மண்சரிவு ஏற்பட்டது. மண்ணில் புதையுண்டவர்களில் இதுவரை 14 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்ட 1100 க்கும் மேற்பட்டோர் ஆறு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அரநாயக்க பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்துகொண்டிருந்தமையினால் மீட்பு பணியில் ஈடுபட்டோர் பாரிய சிரமங்களை எதிர்கொண்டனர். கேகாலை இராணுவ முகாமிலுள்ள 260 க்கும் மேற்பட்ட படையினர் மேஜர் ஜெனரல் காவிந்த குணவர்த்தன தலைமையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதேவேளை அரநாயக்க மண்சரிவினால் காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்றுவருவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினமும் இப்பகுதியில் கடும் மழை பெய்வதால் மீட்பு பணியாளர்களுக்கு அங்கு செல்வதிலேயே சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர். எனினும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இராணுவத்தினர் அப்பகுதியில் மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். மேலும் சடலங்கள் மீட்கப்படலாம் என அஞ்சப்படுகின்றது.
அத்துடன் நேற்றைய தினமும் அரநாயக்க பிரதேசமே சோகமயமாகி காணப்பட்டது. அருகில் உள்ள பிரதேசங்களின் மக்களும் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு வருகை தந்தமையினால் மீட்பு பணிகளுக்கு இடையூறு நேற்றைய தினம் ஏற்பட்டிருந்தது. தொடர்ந்தும் சாமபுர மலையிருந்து நீர் மற்றும் கற்களும் மண் திட்டுகளும் வந்துகொண்டிருப்பதால் மீட்பு பணிகள் கடும் சவாலுக்கு உட்பட்டுள்ளன. மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் கடும் சிரமரங்களை எதிர்கொண்ட வண்ணமே தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை விமானப் படையினர் நேற்றைய தினம் குறித்த பிரதேசத்தை ஹெலிகப்டர் மூலம் கண்காணித்திருந்தனர். அதனடிப்படையில் மீட்பு பணிகள் இடம்பெற்றுவருகின்றன. அரநாயக்க பகுதிக்கு நேற்றைய தினம் சென்றிருந்த முக்கியஸ்தர் ஒருவர் எம்மிடம் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில்
""நாங்கள் காலையிலிருந்து இங்கு இருக்கின்றோம். ஆனால் மீட்பு பணியாளர்களினால் மீட்பு பணிகளை உரிய முறையில் முன்னெடுக்க முடியவில்லை. மழை தொடர்ந்துகொண்டிருப்பதால் மீட்பு பணிகள் தடைப்பட்டுள்ளன. அதிகாரிகள் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் செயற்பட்டுவருகின்றனர். ஆனால் இவ்வாறெ தொடர்ந்து நீடித்தால் மீட்பு பணிகளை கைவிடவேண்டிய நிலை ஏற்படும். நாங்கள் குறித்த இடத்துக்கு செல்ல முடியாமல் இருக்கின்றோம். மிகவும் துரதிஷ்டவசமான நிலைமையே இங்கு காணப்படுகின்றது"" என்றார்.
புளத்கொஹுபிட்டிய
இதேவேளை கேகாலை புலத்கொஹுபிட்டிய, களுபஹனவத்த தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 13 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மொத்தமாக 16 பேர் இந்த மண்சரிவின்போது மண்ணில் புதையுண்டுபோன நிலையில் மூவரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். ஏனைய 3 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
அத்துடன் காணாமல் போயுள்ள ஏனையவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றன. 50 க்கும் மேற்பட்ட இராணுவ அதிகாரிகள் பிரிகேடியர் பி.ஜே. கமகே தலைமையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பிரதேசத்திலும் தொடர்ந்து மழை பெய்துவருவதால் மீட்புப் பணிகள் சிரமங்களுக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இப்பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் தோட்ட குடியிருப்பு தொகுதி ஒன்றே மண்ணில் புதைந்துள்ளது. 6 குடியிருப்புக்கள் இவ்வாறு மண்ணுக்குள் புதைந்துள்ளது.
மண் சரிவையடுத்து புளத்கொஹுபிட்டிய பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்த 320 குடும்பங்கள் மூன்று தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றனர்.
இது இவ்வாறு இருக்க அரநாயக்க மண்சரிவு சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிடுகையில் அரநாயக்க சம்பவத்தை அடுத்து அங்கு 20 அம்புலன்ஸ் வண்டிகள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் 15 டாக்டர்களும், 45 தாதியர்களும் அரநாயக்கப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். வரக்காப்பொல, கேகாலை மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.