வடமாகாண சபைக்கு முன், சமூக சுகாதார உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்
சமூக சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் தொண்டர்கள் இன்று வட மாகாண சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
சமூக சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் தொண்டர்கள் 14 வருடங்களாக பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், இதுவரையும் தமக்கான நிரந்தர நியமனங்கள் கிடைக்கப் பெறவில்லை எனத் தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தை இன்று வியாழக்கிழமை முன்னெடுத்துள்ளனர்.
மேலும், கடந்த 2 வருடங்களாக 6 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டதாகவும் ஆனால், வேலைவாய்ப்பு நியமனத்தில் 759 சுகாதாரத் தொண்டர்களின் பெயர்களும் வரவில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.
இந்த போராட்டத்தில் வட மாகாணத்தைச் சேர்ந்த யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, மன்னார் ஆகிய 5 மாவட்டங்களிலிருந்து 759 க்கும் மேற்பட்ட சமூக சுகாதாரத் உத்தியோகத்தர்கள் மற்றும் தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு சென்ற வட மாகாண சபை முதலமைச்சர், 2 வாரங்களுக்குள் இதுகுறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதாக உறுதியளித்துள்ளார்.