இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணவே அரசுடன் இணைந்து செயற்படுகின்றோம்
வட,கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி மட்டுமன்றி இனப்பிரச் சினைக்குத் தீர்வு காணவே அரசுடன் இணைந்து செயலாற்றுகின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
மருதங்கேணி, வடமராட்சி கிழக்குப் பிரதேச செயலர் பிரிவு ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திற்குத் தலைமையேற்று பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
போரினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு உலகில் உள்ள நன்கொடையாளர் நாடுகளிடமிருந்து நிதி உதவியைக் கோரியுள்ளோம்.
இந்நிலையில் ஜப்பான் மாத்திரம் ஒரு தொகை நன்கொடையை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
ஏனைய ஐரோப்பிய நாடுகள் இந்நிதி உதவிகளை இன்னமும் வழங்கவில்லை. ஆனால் அரசு அந்நாடு களிலிருந்து நிதி உதவி களை வரவழைக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றது.
எனினும் மேற்கத்தேய நாடுகளோ இலங்கை அரசு இரண்டு விடயங்களில் முன்னேற்றத்தைக் காட்ட வேண்டுமென இலங்கைக்குத் பதில ளித்து வருகின்றது. அதன் பிரகாரம் புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும். போர்க்குற்ற விசாரணைக்கு பொறுப்புக்கூற வேண்டும். இவை இரண்டிலும் முன்னேற்றத்தை அரசு காண்பித்தால் தான் சர்வதேச நாடுகள் வடகிழக்குக்கான பாரிய அபிவிருத்திக்கு நிதிகளை வழங்கமுன்வரும் மேற்கத்தேய நாடுகள் மனித உரிமையை அனுசரித்தே நிதி வழங்கும். நாங்களும் இதனையே எதிர்பார்த்திருக்கின்றோம். இவற்றில் முன்னேற்றம் கிடைத்தால் வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு நிதி கிடைக்கும் சாத்தியம் உண்டு என்றார்.