தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்
தேசிய அரசாங்கத்தினால் தோட்ட தொழிலாளர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்ட நாள் ஒன்றுக்கு 100 ரூபா வீத அதிகரிப்பு தொகையினை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் தெரிவிக்காததையடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக தமிழ் முற்போக்கு கூட்டணியினால் திட்டமிட்டபடி இன்றைய தினம் தலைநகரில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான முறையில் கிடைக்க வேண்டிய சம்பள அதிகரிப்பை வலியுறுத்தியும் முதலாளிமார் சம்மேளனத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவும் முன்னெடுக்கப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கத்துவம் பெறும் பங்காளி கட்சிகள் உட்பட கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள,; மகாணசபை உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தோட்ட தொழிலாளர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்;ட நாள் ஒன்றுக்கு 100 ரூபா வீத அதிகரிப்பு தொகையினை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் தெரிவிக்காமையினையடுத்து நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்களுக்கும் தொழில் அமைச்சர் உட்பட சில அமைச்சர்களுக்குமிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
இந் நிலையில் இது தொடர்பிலான அடுத்தக்கட்ட செயற்பாடுகள் தொடர்பில் வினவிய போதே கூட்டணியின் தலைவரும் மொழிகள் மற்றும் தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோகணேசன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
போராட்டம் தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன்.;
தேசிய அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தின் மூலமாக தனியார் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்ட 2500 ரூபா சம்பள அதிகரிப்பு தொகையை தோட்ட தொழிலாளர்களுக்கும் பெற்று கொடுக்கும் வகையில் பாராளுமன்றத்தில் தொழில் உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரத்னவினால் உறுதியளிக்கப்பட்டிருந்தது. எனினும் இவ்வதிகரிப்பை முதலாளிமார் சம்மேளனம் மறுத்துள்ளது.
இந்நிலையில் நாள் ஒன்றுக்கு 100 ரூபாவை பெற்று கொடுப்பது தொடர்பில் நேற்று முன்தினம் மாலை ஜனாதிபதி செயலகத்தில் எமது கூட்டணியின் உறுப்பினர்களுக்கும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவின் திஸாநாயக்க, தொழில் உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன, அபிவிருத்தி உபாய முறைகள் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம ஆகியோருக்கும் இடையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கப்பட்டன. . இதன் போது முதலாளிமார் சம்மேளனத்தின் தீர்மானங்கள் தொடர்பில் எம்மிடம் தெரிவித்த கருத்துகளுக்கு நாம் இணங்கவில்லை. அந்தவகையிலேயே (நாளை) இன்று திட்டமிட்டப்படி காலை 10 மணியளிவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். அந்தவகையில் தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான முறையில் கிடைக்க வேண்டிய சம்பள அதிகரிப்பு தொடர்பில் முன்னெடுக்கப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கத்துவம் பெறும் பங்காளி கட்சிகள் உட்பட கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள,; மகாணசபை உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொள்ளவுள்ளனர் என்றார்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் நலன்புரி விடயங்கள் தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்களுக்கும் இடையே கடந்தக்காலங்களில் இடம்பெற்ற பலச்சுற்று பேச்சுவார்த்தைகளும் எவ்வித இணக்கப்பாடுமின்றி தோல்வியில் முடிவடைந்தன. .
இதனிடையே ஆட்சி மாற்றத்தின் பின்னர் தேசிய அரசாங்கத்தினால் தோட்ட தொழிலாளர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்ட நாள் ஒன்றுக்கு 100 ரூபா வீத அதிகரிப்பு தொகையினை வழங்குவதற்கும் முதலாளிமார் சம்மேளனத்தின் நிலைப்பாட்டில் மாற்றத்தைக் காணமுடியாதிருக்கின்ற நிலையில் 100 ரூபாவுக்கான போரட்டம் தற்போது தொடர்கின்றது
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தையும் அவர்களது நலன்புரி விடயங்களையும் தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த வருடம் மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் இவ் ஒப்பந்தம் முடிவுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.