Breaking News

அரசாங்கம் வடக்கு மக்களுக்கு கல்வீடுகளையேபெற்றுக் கொடுக்கும்-விஜயகலா



அரசாங்கம் வடக்கு மக்களுக்கு கல்வீடுகளையேபெற்றுக் கொடுக்கும் என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உறுதிபடத் தெரிவித்தார்.

பாராளுமன்றில் நேற்று புதன்கிழமை இயற்கை அனர்த்தம் தொடர்பான சபை ஒத்திவைப்புபிரேரணை மீதான விவாதத்தின்போது ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த விவாதத்தில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உரையாற்றும் போது வடக்கில் முன்னெடுக்கப்படும் 65 ஆயிரம் பொருத்து வீட்டுத்திட்டம் அங்குள்ள காலநிலைக்கு பொருத்தமற்றது. இவ்வாறான பொருத்தமற்ற திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதால் தான் அனர்த்த நிலைமைகள் எழுகின்றன எனக்கூறினார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அரசாங்கம் 65 ஆயிரம் பொருத்து வீட்டுத்திட்டத்தை இடைநிறுத்தி விட்டதாகவும் கல்வீடுகளே வடக்கு மக்களுக்கு கட்டிக்கொடுக்கப்படும் எனவும் கூறினார்.

அத்துடன் அவர்களின் மீள்குடியேற்றம் உறுதிப்படுத்தப்படுமென உறுதிபடத் தெரிவித்தார்.

இதன்போது பதிலளித்த சிவசக்தி ஆனந்தன் எம்.பி. நீங்கள் வடக்கு மக்களின் நிலையை உணர்ந்தவர்களாக இருக்கின்றீர்கள். ஆனால் உங்களுடைய அமைச்சரின் நிலைப்பாடு வேறாகவுள்ளதே என்றார்.

அதன்போது பதிலளித்த இராஜங்க அமைச்சர் தற்போது தேசிய அரசாங்கம் ஆட்சியில் உள்ளது. வேறுபட்ட நிலைப்பாடுகள் இல்லை ஒரே நிலைப்பாடே உள்ளது என்றார்.