புலிகளால் கைவிடப்பட்ட நிலங்கள் குறித்து விளக்கமளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
யுத்தத்தின்போது வன்னி மாவட்டத்தில் விடுதலைப் புலிகளால் கைவிடப்பட்டு சென்ற நிலங்களை, மக்களிடம் கையளிக்குமாறு காணி ஆணையாளர் உத்தரவிட்டிருந்த போதும், அவ் உத்தரவு இன்னும் செயற்படுத்தப்படாமை குறித்து விளக்கமளிக்குமாறு சட்டமா அதிபருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யுத்த காலத்தில் கைவிடப்பட்ட காணிகளில், யுத்தம் நிறைவடைந்த பின்னர் வேறு நபர்கள் குடியேறியுள்ளனர். இதுகுறித்து, காணி உரிமையாளர்களால் கடந்த 2013ஆம் ஆண்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து குறித்த காணிகளை உரியவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதாக, அவ் வருடமே நீதிமன்றில் காணி ஆணையாளர் உறுதியளித்தார். எனினும் மூன்று வருடங்களாகியும் குறித்த காணிகள், அவற்றின் உரிமையாளரிடம் கையளிக்கப்படவில்லை. இதுகுறித்து காணி உரிமையாளர்களால் நேற்று (புதன்கிழமை) நீதமன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இதன்போது, குறித்த வழக்கை விசாரித்த பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம், எதிர்வரும் ஜூலை மாதம் 26ஆம் திகதி, இவ்விடயம் குறித்து மன்றில் விளக்கமளிக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.