Breaking News

அரசியல் தீர்வுக்கு ஜெயலலிதாவின் அழுத்தம் தொடர்ந்தும் வேண்டும்!

"தமிழக முதல்வராக மீண்டும் ஜெயலலிதா பதவியேற்றமை வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி இலங்கையில் உள்ள அனைத்துத் தமிழர்களுக்கும் சாதகமானது. எனவே, இலங்கையில் நீண்டகாலமாகத் தொடரும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க மைத்திரி தலைமையிலான இலங்கை அரசுக்கும், நரேந்திர மோடி தலைமையிலான இந்திய மத்திய அரசுக்கும் ஜெயலலிதா தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவேண்டும்." - இவ்வாறு வலியுறுத்தியுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. 

ஆறாவது தடவையாகவும் தமிழக முதல்வராக செல்வி ஜெயலலிதா ஜெயராம் பதவியேற்றுள்ளார். அவர் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றமையால் தமிழக மக்கள் மட்டுமன்றி வடக்கு, கிழக்கு மக்களும் பட்டாசுகள் கொளுத்தி தமது மகிழ்ச்சியை வெளிக்காட்டினர். ஜெயலலிதா தேர்தல் பிரசாரங்களின்போது இந்தியத் தமிழர்கள் மட்டுமன்றி இலங்கைத் தமிழர்கள் சார்பாகவும் பல அறிவிப்புக்களை வெளியிட்டிருந்தார். 

இதன்மூலம் அவர் மீதான எதிர்பார்ப்புக்கள் இன்னும் அதிகமாகியுள்ளன. ஜெயலலிதா, தமிழக முதல்வராக மீண்டும் பதவியேற்றமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கையில், "ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராகியமை வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி இலங்கையில் உள்ள அனைத்துத் தமிழர்களுக்கும் சாதகமானது. தமிழக அரசியலும், தமிழ் நாட்டு மக்களும் இலங்கைத் தமிழர்களுக்கு சார்பான முடிவையே வழங்குவார்கள்" - என்றார். 

இதேவேளை, கச்சதீவு விவகாரம் தொடர்பில் சுமந்திரன் தெரிவிக்கையில், "கச்சதீவானது இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள பிரச்சினைக்குரிய விடயமாகும். இதற்கு இந்திய மத்திய அரசும், இலங்கை அரசும் இணைந்தே தீர்வை வழங்க வேண்டும்" - என்று பதிலளித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. கருத்துத் தெரிவிக்கையில், 

"கடந்த காலங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இலங்கை தமிழர்களுக்குச் சார்பான முடிவுகளை ஜெயலலிதா எடுக்கவாய்ப்புள்ளது. ஏனெனில், இலங்கைத் தமிழரின் நன்மை கருதி அவர் கடந்த ஆட்சியின்போது பல தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தார். இந்திய மத்திய அரசுக்கு அழுத்தங்களும் கொடுத்துள்ளார். எனவே, இலங்கையில் நீண்டகாலமாகத் தொடரும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க மைத்திரி தலைமையிலான இலங்கை அரசுக்கும், நரேந்திர மோடி தலைமையிலான இந்திய மத்திய அரசுக்கும் தமிழக முதலவர் ஜெயலலிதா தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவேண்டும்" - என்றார். 

கச்சதீவு விவகாரம் தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. கருத்துத் தெரிவிக்கையில், "கச்சதீவு என்பது இலங்கைக்குச் சொந்தமான இடம். அதில் ஒரு ஆலயத்தை நிர்மாணிக்க இந்தியாவிடம் ஒப்புதல் பெற வேண்டிய தேவையில்லை. ஆனால், இலங்கை அரசும் இந்திய அரசும் இந்த விடயத்தில் ஒரு புரிந்துணர்வுடன் செயற்படவேண்டும். இந்திய அரசை பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இலங்கை அரசு இருக்குமானால் இரு நாடுகளும் கலந்துரையாடி ஒரு தீர்வை வழங்கலாம்" - என்றார்.