காணாமற்போனோர் தொடர்பாக சிறப்புப் பணியகம் – அமைச்சரவை அங்கீகாரம்
போர்க்காலத்தில், காணாமற்போனோர் தொடர்பான, விபரங்களை அறிந்து கொள்ளவும், தகவல்களை உறவினர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கும், சிறப்புப் பணியகம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இதற்கான சிறப்புப் பத்திரம் ஒன்றை சமர்ப்பித்தார்.
காணாமற்போயுள்ளதாக அல்லது கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ள நிலைமைகளின் கீழ் காணாமற்போன அல்லது கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ள நபர்கள் தொடர்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
அவ்வாறு காணாமற்போயுள்ள நபர்கள் தொடர்பான விபரங்கள் அவர்களது உறவினர்களுக்கு அத்தியாவசியமானதாகும். அவ்வாறே காணாமற்போயுள்ள நபர்கள் தொடர்பான உண்மையான தகவல்களை அவர்களது உறவினருக்கு தெரியப்படுத்துவதன் மூலம் பல நன்மைகளை அடைய முடியும்.
காணாமற்போனவர்கள் சம்பந்தமாக எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு பரிந்துரைகளை முன்வைத்தல், காணாமற்போனோர் மற்றும் அவர்களது உறவினர்களின் உரிமைகள் மற்றும் பற்றுதல்களை பாதுகாத்துக்கொள்ள அறிவுறுத்தல், அரச நிறுவனங்கள் மற்றும் வேறு நிறுவனங்கள் மூலம் கண்டு பிடிப்பதற்கு முடியாமற்போன நபர்களின் விபரங்கள் அடங்கிய தரவுகளை திரட்டி மத்திய தரவு வலையமைப்பொன்றை ஏற்படுத்தி கோவைப்படுத்தல் போன்ற பணிகளை முன்னெடுக்க காணாமற்போனோர் சம்பந்தமான பணியகம் எனும் பெயரில் சுயாதீன பணியகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும், அந்த அமைச்சரவைப் பத்திரத்தில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டிருந்தார்.
அதையடுத்து, இந்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.