Breaking News

ஒட்டுமொத்த முஸ்லிம் தலைவர்களுக்கும் தலைகுனிவு விக்ரமபாகு :



கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் கடற்படை அதிகாரியுடன் நடந்துகொண்ட விதமானது ஒட்டுமொத்த முஸ்லிம் தலைவர்களுக்கும் தலைகுனிவாகும். அத்துடன் அவர் முஹம்மத் நபியின் போதனையையும் மதிக்க தவறியுள்ளார் என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்கரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுவோம் என்ற இயக்கம் நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

கிழக்கு மாகாணத்தில் கடற்படையினரால் ஏற்பாடுசெய்யப்பட்ட விழாவொன்றுக்கு அமெரிக்க தூதுவர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

மாகாணத்தில் இடம்பெறக்கூடிய விழாக்களுக்கு வெளிநாட்டு தூதுவர்கள் கலந்துகொள்வதென்றால் அந்த நிகழ்வுகளுக்கு மாகாணத்தின் முதலமைச்சருக்கும் அழைப்பு விடுப்பதுதான் முறையாகும். 

என்றாலும் முதலமைச்சர் அந்த நிகழ்வில் தான் ஏன் அவ்வாறு நடந்துகொண்டார் என்பது தொடர்பாக நிகழ்வில் தெரிவிக்கவும் இல்லை. 

அத்துடன் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற விழா முதலமைச்சருக்கு தெரியாமல் ஆளுனர் ஏற்பாடுசெய்திருந்தால் அது இனவாத செயலாகும். அவ்வாறான செயல்களுக்கும் இடமளிக்க முடியாது. 

மேலும் வெளிநாட்டு தூதுவர் ஒருவருக்கு முன்னால் கடற்படை அதிகாரியொரவரை முதலமைச்சர் மேடையில் கடிந்துகொண்டமையானது நாட்டின் கௌரவத்துக்கு பாதிப்பாகும். அவ்வாறு முதலமைச்சருக்கு அநீதி ஏற்பட்டிருந்தால் அதனை முறையாக அணுகி பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொண்டிருக்கலாம்.