மன்னிப்புக் கோராவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : சபாநாயகர் எச்சரிக்கை
நாடாளுமன்றத்தில் ஒழுக்கமற்ற ரீதியில் நடந்துகொள்ளும் உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் கௌரவத்தை காக்கும் வகையிலேயே தமது நடவடிக்கைகள் அமையுமென சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.
கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இலங்கை விமான சேவை தொடர்பான விவாதத்தில், நாடாளுமன்றத்திற்கு ஒவ்வாத வார்த்தையொன்றை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ பயன்படுத்தியிருந்தார். இதற்காக, நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் பகிரங்கமாக மன்னிப்புக் கோரிய அமைச்சர் ஹரீன், சபாநாயகர் எடுக்கும் நடவடிக்கைக்கு தாம் தலைவணங்குவதாகவும் குறிப்பிட்டார்.
இதனை வரவேற்ற சபாநாயகர், இது அவரது எதிர்கால அரசியலுக்கு ஆசிர்வாதமாக அமையுமென குறிப்பிட்டார். அத்தோடு, நாடாளுமன்றத்தின் முக்கிய அதிகாரியொருவரை சிலர் திட்டியுள்ளதாகவும் அவரிடம் காணப்பட்ட கோவைகள் பறிக்கப்பட்டதாகவும் சபாநாயகர் இதன்போது குறிப்பிட்டார். இந்நிலையில், இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்புக் கேட்காவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென சபாநாயகர் கரு ஜயசூரிய மேலும் தெரிவித்தார்.