அனுர சேனநாயக்கவுக்கு மே 26 வரை விளக்கமறியல்
ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் அனுர சேனநாயக்கவை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் நிசாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.
தாஜுதீன் கொலை தொடர்பான இரகசியங்களை மறைத்தார் என்ற குற்றச்சாட்டில் நேற்று பிற்பகல் அனுர சேனநாயக்க, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
இவரை கொழும்பு மேலதிக நீதிவான் நிசாந்த பீரிஸ் முன்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முன்னிறுத்திய போது, எதிர்வரும் 26ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்குறுமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
தாஜுதீன் கொலை தொடர்பான சான்றுகளை அழிக்குமாறு இவர் தனக்குக் கீழ் பணியாற்றிய அதிகாரியான அமரசிறி வீரரத்னவுக்கு ( தற்போது, பிரதி காவல்துறை மா அதிபர்) உத்தரவிட்டிருந்தார்.தாஜுதீன் கொலையை விபத்து மரணம் என்று தீர்மானிக்கும் வகையில், நீதித்துறையை இவர் தவறாக வழிநடத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அதேவேளை விபத்து நடந்த நாரஹேன்பிட்டிய சாலிகா மைதானப் பகுதியில், அதிகாலையில் சாதாரண உடையில் அனுர சேனநாயக்க காணப்பட்டதற்கான சான்றுகளும் தம்மிடம் இருப்பதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.