Breaking News

மாற்று அணி முயற்சி தோல்வியா? கட்சிகளின் எதிர்காலம் என்ன? ஒரு பார்வை!

தமிழக சட்டமன்ற தேர்தலில், மாற்று அரசியலை முன்னெடுத்த கட்சிகளான தே.மு.தி.க , த.மா.க , மக்கள் நலக்கூட்டணி மற்றும் பா.ம.க படுதோல்வியை சந்தித்தது. வரும் காலங்களில் இந்தக்கட்சிகளின் எதிர்காலம் என்ன?  அந்த கட்சிகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைவு ஏற்பட்டது ஏன் ? என்பது குறித்த செய்தி தொகுப்பை காணலாம்.


தமிழகத்தில் கூட்டணி ஆட்சி மாற்றம், முன்னேற்றம் என்ற முழக்கங்களை முன்வைத்து மாற்று அரசியலை முன்னெடுத்த கட்சிகள், சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. மக்கள் நம்பிக்கை இழந்த காரணத்தாலே அக்கட்சிகள் பெரும் தோல்வியை சந்தித்தன.

அதிலும் குறிப்பாக கடந்த 2011 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 29 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த தே.மு.தி.க இம்முறை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.

மேலும் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் படு தோல்வியை சந்தித்த அக்கட்சி, டெப்பாஸிட்டும் இழந்தது. இந்த தோல்விக்கு பிறகு தே.மு.தி.க மீண்டு வருவது சந்தேகமென்றும், விஜயகாந்த் தலைமையில் தே.மு.தி.க இனி எழுச்சி பெற வாய்ப்பில்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அக்கட்சியிலுள்ள மேலும் பல தலைவர்கள் காங்கிரஸில் இணைய வாய்ப்பு அதிகமென்றும் அரசியல் விமர்சகர் ‘சுமந்த் .சி. ராமன்’ கருத்து தெரிவித்துள்ளார். இதை போல பா.ம.க. தன் ஓட்டு வங்கியை சற்று அதிகரித்து உள்ளது.

ஆனால் அது வன்னியர் சமூகம் அதிகமாக வாழும் பகுதியில் மட்டுமே ஏற்பட்டுள்ளது தவிர ஒட்டுமொத்த தமிழகத்தில் பா.ம.க.வின் ஓட்டு வங்கி அதிகரிக்கவில்லை, எனவே இது தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் அவர் தெரிவித்தார்.

மூன்றாவது அணியாக உருவெடுத்த மக்கள் நலக்கூட்டணிக்கு மக்களிடையே ஆரம்பத்தில் வரவேற்பு இருந்தது, ஆனால் அ.தி.மு.க.வின் ‘பி’ அணி என்ற தி.மு.க.வின் பிரச்சாரம் மற்றும் சூழ்நிலையை எதிர் கொள்ள சரியான யுக்திகளை கையாளாததும் தங்கள் கூட்டணியின் பின்னடைவுக்கு காரணம் என்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.

மாற்று அணி என்பது தமிழகத்தில் சாத்தியம், ஆனால் இந்த தேர்தலில் அமைந்த மாற்று அணியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், குறிப்பாக மக்கள் நலக்கூட்டணி முன்னிறுத்திய முதலமைச்சர் வேட்பாளர் விஜயகாந்தை மக்கள் ஏற்காததே மூன்றாவது அணியின் தோல்விக்குப் பிரதான காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.