வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு மாத்திரம் அதிகாரங்களை கோரவில்லை!
வடக்கு – கிழக்கு இணைந்த மாநிலத்திற்கு கோரும் சகல அதிகாரங்களும், நாட்டிலுள்ள ஏனைய மாநிலங்களுக்கும் அமையவேண்டும் என்பதே தமது முன்மொழிவு என்றும் தமக்கென விசேடமாக எந்தவொரு அதிகாரத்தையும் கோரவில்லையென்றும் வட மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
வட மாகாண சபையால் முன்வைக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்ட யோசனை, மக்களுக்கு சென்றடையும் வகையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கையளிக்கப்பட்டது. இதனையடுத்து கருத்துத் தெரிவித்தபோதே, வட மாகாண அவைத்தலைவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.
அத்தோடு, சமஷ்டி என்ற சொல்லுக்கு, சிங்கள மக்கள் பிழையான முறையில் அர்த்தப்படுத்திக்கொண்டுள்ளமையே பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்துள்ளதாக தெரிவித்த அவர், சிங்கள ஊடகங்கள் இதனை பெரும்பான்மையின மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென வலியுறுத்தினார்.
அத்தோடு, வட மாகாண சபையால் முன்வைக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்ட யோசனையானது, வட மாகாண சபையினுடையதே அன்றி தனிப்பட்ட ஒருவரை சார்ந்தல்ல என்பதையும் தெளிவுபடுத்தினார். அதனால், வடக்கு முதல்வரை இவ்விடயத்தில் தாக்குவது நியாயமல்ல என்றும் வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் குறிப்பிட்டார்.