Breaking News

யாழ் குடாநாட்டினை மீட்பதற்கு வரப்போகும் மீட்பர் யார்?



வட மாகாண இளைஞர் சமூகத்தினை சீரழிக்கும் போதைப்பொருளுக்கும் , மது பானத்திற்குமான பிரதான விற்பனைக் களஞ்சியமாக காணப்படும் யாழ்ப்பாணக் குடாநாட்டினை மீட்பதற்கு வரப்போகும் மீட்பர் யார் என்ற ஏக்கமே தற்போதைய குடாநாட்டின் பிரதான கேள்விக்கனையாகவுள்ளது.

வடக்கின் 05 மாவட்டங்களையும் பொறுத்த மட்டில் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிக மதுபானச்சாலைகள் நிரம்பி வழிகின்றன. யாழ் குடாநாடு முழுவதுமாக 47 மதுபானசாலைகளும் 22 ரெஸ்ரூரன்ட்களுமாக மொத்தம் 69 மது மையங்கள் தனியாரால் மட்டும் நடாத்தப்படுகின்றது

இவற்றினை மட்டுமே மதுவரித் திணைக்கள அதிகாரிகளும் பரிசோதனைக்கும் உட்படுத்தமுடியும் . ( அழிவைத் தரும் பொருளுக்கு ஒரு பரிசோதனைக் கண்துடைப்பு)

இவற்றினை விட இராணுவத்தினரால் நடாத்தப்படும் சில ரெஸ்ரூரன்ட்டுகளும் உள்ளன. குறிப்பாக தல்செவன போன்றன. இதேபோல் அண்மையில் ஜனாதிபதியினால் நகரின் மத்தியில் திறந்துவைக்கப்பட்ட விடுதிகளை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் கூட எட்டியும் பார்க்கமுடியாது. இவ்வாறானவையும் படையினரால் ஆறு இடங்களில் நடாத்தப்படுகின்றன.

இவற்றினைவிடவும் உள்ளூர்த் தொழிலாளர்களின் உற்பத்தியான கள் விற்பனை மையங்கள் 148 இடங்கள் கள்ளுத் தவறனைகளாக இயங்குகின்றன. இவை அனைத்தும் மாவட்ட மதுவரித் திணைக்களத்தின் புள்ளிவிபரங்களின் பிரகாரமே பெறப்பட்டது.

இதேவளை அடுத்த சந்த்தியினை நல்வழிப்படுத்தி ஓர் மணிதனை பூரண மனிதனாக்கும் வாசிப்பு பழக்கத்திற்குரிய நூலகங்கள் உள்ளூராட்சி மன்றங்களின் கட்டுப்பாட்டில் 55 நூலகங்களும் தனியார் துறைகளின் கீழ் 07 நூலகங்களும் உள்ளதுடன் மத்திய அரசு சார்ந்த துறை சார் நூலகங்கள் 03 ம் என 65 நூலகங்கள் மட்டுமே உள்ளது. இதில் உள்ளூராட்சி சபைகளின் கீழ் உள்ளவற்றில் 06 நூலகமும் தனியாரின் கீழ் உள்ளவற்றில் 03 நூலகமும் பெயரளவில் மட்டுமே உள்ளது.

இந்த நிலையில் மாவட்டத்தின் பொது இடங்களில் உள்ள நூலகங்களின் எண்ணிக்கையினை விடவும் மதுபான விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க காரணமாக இருந்த உயர் கல்வி கற்ற அதிகாரிகள் இன்று இந்த மதுபானங்களினாலும் போதைப்பொருளினாலும் தமது பிள்ளைகளே அதள பாதாளம் நோக்கி நகர்வதை தடுக்க முடியாமல் தவிக்கின்றனர்.

குடாநாட்டின் நகர்ப்புறத்தில் வாழும் அரச உயர் அதிகாரி ஒருவர் படும்பாடும் சொல்லிமாளாது. இவரது மனைவியும் அரச உயர் பதவி வகிப்பவர் ஒரேமகன் யாழ் நகரின் பிரபல பாடசாலை மாணவன். ஆனால் சில காலமாக போதைக்கு அடிமையாகி நிலை தடுமாறுகின்றான்.

தடுக்க எவ்வளவோ முயன்றும் பெறுபேறோ பூச்சியமாகவே காணப்பட்டதனால் கல்வியை இடை நிறுத்தி கொழும்பு கொண்டு சென்றார் முடியவில்லை.

தற்போது மீண்டும் குடாநாட்டிற்கே அழைத்து வந்து விட்டார். ஆனால் அவரின் வேதனை தீர்ந்தபாடில்லை.

தற்போது கூறுகின்றார் மனிதன் மனிதனாக வாழ சட்டம் மட்டும் போதாது . உணர்வு கொண்டவர்களும் தேவைதான் என. என்ன செய்வது. இது முடிந்த கதை.

இதேவேளை குடாஅதேவேளை முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் சனத்தொகையினால் சிறியதாகவுள்ளபோதிலும் நிலப்பரப்பினால் பாரிய அளவினைக் கொண்டவை இந்த மாவட்டங்களில் இன்றுவரையான தகவலின் பிரகாரம் ஒரு மதுபானசாலை , இரு ரெஸ்ரூரன்ட் என்பன மட்டுமே உண்டு என்பதனை பெருமையுடன் சொல்லிக்கொள்ள முடியும்.

இருப்பினும் மன்னார் மாவட்டத்தினில் 10 மதுபானசாலைகளும் , ரெஸ்ரூரனட்டுகளும் , 14 கள்ளுத் தவறனைகளும் உள்ளதோடு வவுனியாவில் 14 மதுபானசாலைகளும் , 11 ரெஸ்ரூரன்ட் , என்பவற்றுடன் 41 கள்ளுத் தவறனைகளும்உள்ளது.

இதேவேளை 69 மதுபான விற்பனை நிலையங்களை உடைய யாழ்ப்பானக் குடாநாட்டில் இவர்களின் பாதிப்பு மட்டுமன்றி அனைத்து வைத்திய்திற்குமாக சகல தரங்களையும் உடைய 45 வைத்தியசாலைகளே உள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன.

அவ்வாறெனில் மாவட்டத்தின் அத்தியாவசிய தேவையான வைத்தியசாலையில் விடவும் மனிதனை மனிதனாக்கும் நூலகங்களை விடவும் மதுபானச்சாலைகளிற்கே நாட்டின் ஆட்சியாளர்கள் முக்கியத்துவம் வழங்குகின்றனரா என்ற பலமான கேள்வியும் எழுகின்றது. இலங்கை ஓர் ஜனநாயக சோசலிச குடியரசு என்றுதான் சொல்லப்படுகின்றது.

குடாநாட்டின் மக்கள் தொகையையும் மதுபானசாலைகளின் எண்ணிக்கையை ஒப்பிடுகின்றவேளையில் குடியரசு என்பது குடிகார்ரின் பணத்தில் இயங்கும் அரசா ? என்ற சந்தேகத்தினையும் எழுப்பி நிற்கின்றது.

ஏனெனில் மது பானத்தின் வருமானம் இன்றுவரை அதிகாரிகளிற்கே உறுதிபடக் கூறமுடியாத நிலமை. இருப்பினும் யாழ்.மாவட்ட மதுவரித் திணைக்களத்தின் தகவலின் பிரகாரம் விற்பனை வரிகள் அனுமதிபத்திர நடைமுறைகள் அனைத்தும் தவிர்த்து மாவட்டத் திணைக்களத்தின் வருமானம் கடந்த ஏப்பிரல் மாதம் கள் அடைத்த வரி வருமானம் 68 லட்சத்து 5 ஆயிரத்து 500 ரூபாவும் , சாரயம் அடைத்தமைக்கான வரியாக 28 லட்சத்து 42 ஆயிரத்து 663 ரூபாவும் என மொத்தம் 96 லட்சத்து 48 ஆயிரத்து 163 ரூபா பெறப்பட்டுள்ளது. ஏனைய வருமானங்கள் தனியானவையாகும்.

வட மாகாணத்தில் இத்தகைய மதுபான விற்பனை நிலையங்களின் ஊடாக சமூகங்கள் சீரழிக்கப்படுகின்றபோதும் இறுதியுத்தமான 2009 ன் பிற்பாடே அரச கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்ட கிளிநொச்சி , முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா மூன்று மதுச்சாலைகள் மட்டும் கட்டுப்படுத்தப்பட்ட அளவில் உள்ளது என்றால் அங்கு போர் மட்டும் வழிநடாத்தப்படவில்லை அடுத்த சந்த்தியும் வழிப்படுத்தப்பட்டுள்ளது. என்ற மறுக்க முடியாத உண்மையும் உள்ளது.

வட மாகாணத்தின் மதுபானசாலைகளின் பணித்தொகுதிகளைவிடவும் அரச பணியாளர்களாக மதுவரித் திணைக்களத்தின் கீழும் மொத்தமாக 97 பணியாளர்களே பணியாற்றுகின்றனர். ஆனால் அரசின் வருமானம்வருடம் ஒன்றிற்கு நூறுகோடியை தாண்டுகின்றது.

இவ் வாறு வருமானத்திற்காக மதுபானத்தினால் ஒருபக்கம் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில் மற்றுமோர் அழிவுப்பாதையாக போதைப்பொருள் பாவனையும் குடாநாட்டில் திறந்து விடப்பட்டுள்ளது.

யாழ் குடாநாட்டினை ஒரு லட்சத்து 50 ஆயிரம் படையினர் சுற்றிவளைத்து நிற்க குடாநாட்டிற்குள் ஆயிரக்கணக்கான கேரள கஞ்சா உள் நுளைகின்றது எனில் யாரின் ஆசீர்வாத்த்துடன் எடுத்து வரப்படுகின்றது. என்பதும் புலனாகின்றது. என மாகாண முதலமைச்சரே பகிரங்கமாக கூறுகின்றார்.

ஓர் விடுதலைவேண்டி  வேட்கையுடன் நின்ற இணத்தினை இன அழிப்புச் செய்து லட்சக்கணக்கானோரைக் கொன்றொழித்தபோதுப் கொலை வலையங்களில் இருந்து தப்பியோரின் உயிரை அழிப்பின் சர்வதேச சட்டங்கள் எனவும் மனித உரிமை எனவுக் குரல் எழும்பும் என்பதனால் எஞ்சியோரைஉயிருடன் நடமாட விட்டு உடலாலும் , உள்ளத்தாலும் அழிக்கும் மற்றுமோர் இன அழிப்பின் வடிவமே மேற்கொள்ளப்படுகின்றதா என்ற கேள்விக்கு பதில் அளித்து இத்துயர்களில் இருந்து இம் மக்களை மீட்கும் வல்லமை கொண்ட மீட்பர் யார் ? என்ற கேள்வியே பலமாக எழுந்துள்ளபோதும். ஓர் அளவு வல்லமை படைத்தவர்களும் கைகட்டி வேடிக்கையே பார்ப்பதனால் தமிழ் இனத்தின் இருப்பு கேள்விக் குறியாகவே இருக்கும்.