Breaking News

அரநாயக்க மீட்புப்பணிகளை நிறுத்தியது இராணுவம் – 141 பேரின் கதி தெரியவில்லை

கேகாலை மாவட்டத்தில் உள்ள அரநாயக்க பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் புதைந்து போன மூன்று கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த தேடுதலை இராணுவம் நிறுத்தியுள்ளது.

அரநாயக்க பகுதியில், ஏற்பட்ட நிலச்சரிவினால், மூன்று கிராமங்களின் பெரும்பாலான பகுதிகள் புதைந்து போயுள்ளன. அங்கிருந்த 141 பேரின் கதி இன்னமும் தெரியாதுள்ளது. இவர்கள் நிலத்தில் புதைந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இனிமேலும் இவர்களை உயிருடன் மீட்கும் வாய்ப்புகள் இல்லை என்பதாலும், மீட்புப் பணிகளுக்குச் சாதகமான காலநிலை இல்லை என்பதாலும், மீட்புப்பணிகளைக் கைவிட   இராணுவம் முடிவு செய்துள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட மூன்று கிராமங்களின் பெரும்பாலான பகுதிகள், சுமார் 5 தொடக்கம், 15 அடி வரையிலான சேற்று மண்ணினால் மூடப்பட்டுள்ளது.

இதனை முற்றாக அகற்றி மீட்புப்பணிகளை முன்னெடுப்பது சாத்தியமற்றது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, நிலச்சரிவு மீட்புப்பணிகளில் இருந்து விலக்கப்பட்ட சிறிலங்கா இராணுவத்தினரை, பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபடுமாறு  இராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளார்.