இராணுவத்துடன் முன்னாள் போராளிகளை இணையக்கூறுகிறார் வடக்கு ஆளுநர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளும், ஸ்ரீலங்கா இராணுவச் சிப்பாய்களும் ஒன்றிணைவதே தனது எதிர்பார்ப்பாகும் என்று வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரெ தெரிவித்துள்ளார்.
மேலும் சிங்கள இராணுவத்துடன் முன்னாள் போராளிகள் உட்பட தமிழ் இளைஞர்களும் இணைந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். கிளிநொச்சி இராணுவ ஒத்துழைப்பு மையத்தின் ஏற்பாட்டில் வெசாக் தின நிகழ்வு இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 29 குடும்பங்களுக்கு கால்நடைகளை வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இதன்போது வழங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். அத்துடன் கால்நடைகளை உணவுக்காக பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டிய விடயம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
புத்த பெருமான் இந்த நாட்டில் அனைத்து இன மக்களும் இன, மத.மொழி வேறுபாடு இன்றி சமாதான வாழ வேண்டும் என்பதையே போதித்துள்ளார். இந்த புண்ணிய நாளில் இங்கு கூடியிருக்கின்ற எல்லோரும் ஒன்றாக இணைந்து நல்லதொரு புண்ணியம் தரக்கூடிய வேலையை செய்திருக்கின்றோம்.
யுத்தால் பாதிக்கப்பட்ட இந்த வறுமை மக்களின் வாழ்வாதாரத்தினைமேம்படுத்துவதற்காக இந்த பசுமாடுகளை அவர்களுக்கு வழங்கி அவர்களின் குடும்பத்தின் வாழ்வாதாரத்தினை உயர்த்தியுள்ளோம். நாட்டில் வாழுக்கின்ற இந்து மதத்தவரை பொறுத்தவரையில் பசு அவர்களின் தெய்வம்ரூபம். சிவபெருமான் கடவுளின் வாகனம். எனவே பசுக்களை இறைச்சிக்காக வெட்டுவதனை தடை செய்யுமாறு இந்து அமைப்புக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. அதனையே ஆளுநராகநானும் விரும்புகின்றேன்.
இந்த பசுமாடுகளை நன்றாக வளர்த்து பெருக்கி அவற்றிலிருந்து பாலினை பெற்று உங்கள் பொருளாதாரத்தினை உயர்த்துக் கொள்ளுமாறு வேண்டி நிற்கின்றேன் - என்றார்.
இந்த நிகழ்வில், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.