தமிழ்த்தேசிய அரசியலின் முதல் தடம் – சீமான் அறிக்கை
தமிழ்த்தேசிய அரசியலின் முதல் தடம்…லட்சக்கணக்கான தமிழர்களின் அங்கீகாரம்… தமிழர் நலன் சார்ந்த அரசியலின் தொடக்கம்…
பெருகி ஓடிய பண வெள்ளத்திற்கும், கோரத்தாண்டவம் ஆடிய அதிகாரப் புயல்களுக்கும் நடுவே, இறுதி வரை சமரசமில்லாமல் பெருத்த நம்பிக்கைகளோடு 2016 சட்டமன்றத் தேர்தலை சந்தித்துச் சாதித்த என்னுயிர் நாம் தமிழர் தம்பிகளுக்கு என் புரட்சி வாழ்த்துகள்.
முதன்முறையாக இந்தத் தேர்தலில் களமிறங்கி, ஓய்வற்று.. உறக்கமற்று போராடிய ஆயிரக்கணக்கான இலட்சிய உறுதிக் கொண்ட என் உயிர்த் தம்பிமார்களை,தளபதிகளை நாம் தமிழர் கட்சி கொண்டிருப்பது எனக்குக் கிடைத்த பெரும்பேறாகக் கருதுகிறேன்.
2009ல் தனிமனிதர்களாக இருந்து, 2010ல் கட்சியாகி, இன்று கணிசமான வாக்குகளைப் பெற்று நாம் தமிழர் கட்சி தனது தனித்துவத்தை அரசியல் களத்தில் பதிவு செய்து இருக்கிறது.
புள்ளியில் இருந்து தொடங்குவதாக அறிவித்த நாம், எவ்வித சாதி, மத, அதிகார, பணப் பலமும் இல்லாது, கருத்துப் பரப்புரை மூலமாகவே லட்சக்கணக்கான மானத்தமிழர்களின் மனங்களை வென்றெடுத்துள்ளோம்.
எளிய பிள்ளைகளாகிய நாம் நான்கரை லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைச் சேகரித்து, தமிழக அரசியல் தளத்தில், புதிய நம்பிக்கைகளோடு, நிகரற்ற அரசியல் சக்தியாக வளர்ச்சி பெற்றுள்ளோம்.
இந்தத் தேர்தலில் மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சியை முன்வைத்து, சமூகநீதி தத்துவத்தை வேட்பாளர்கள் தேர்விலேயே உறுதிசெய்து, புறக்கணிக்கப்பட்ட தமிழ்தேசிய இனத்தின் ஒற்றைக் குரலாய் தமிழக வீதிகளில் நாம் தமிழரின் இளையோர் எழுப்பிய ‘எங்கள் திருநாட்டில், எங்கள் நல்லாட்சியே’ என்கிற முழக்கத்தின் அதிர்வு வரலாற்றில் நிகழ்ந்திருக்கிற வசந்தத்தின் இடிமுழக்கம். இந்த தேர்தலில் எமது தம்பிகளும், தளபதிகளும் கடைக்கோடி தமிழருக்கும் இனமான தமிழினத்தின் அரசியலை, அதன் முக்கியத்துவத்தை கொண்டு சேர்த்ததே நமக்கான முதல் வெற்றியாகக் கருதுகிறேன்.
அரசியல் அதிகாரத்தை அடைய முனைகிற தேர்தல் பாதை புதிதாய் தொடங்குகிற எவருக்குமே சிவப்புக் கம்பள வரவேற்பினை அளித்ததில்லை.
காலங்காலமாக தேர்தல் வழி என்பது அதிகாரத்தினை தங்கள் கரங்களுக்குள் வைத்திருப்பவரின் அராஜகத்தாலும், அடாவடியாலும், துரோகத்தாலும், அதிகாரத்தாலுமே நிரம்பியிருக்கிறது.
இம்முறை இவ்வனைத்தையும் தாண்டி நாம் தமிழர் தம்பிகள் தமிழக வீதிகளில் முன்னெடுத்த வலுவான கருத்தியல் பரப்புரையால் இன்று நிகழ்ந்திருக்கிற தமிழ்தேசிய அரசியலுக்கான அங்கீகாரம் நமக்கு கிடைத்து இருக்கிறது. கடந்த 50 ஆண்டுகாலத் திராவிட ஆட்சியாளர்களின் சுயநல,பித்தலாட்ட பதவி அரசியலால் தமிழகம் தாழ்ந்து கிடக்கிறது.
சமூக ஏற்றத்தாழ்வு முரண்களை பெரிதாக்கி தமிழர்களுக்குள் பிளவு ஏற்படுத்திக் குளிர்காயும் திராவிட அரசியல்வாதிகளின் அற்பநோக்கத்தினால், தமிழினத்தில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு சாதியகட்டமைப்பு இறுக்கமாகியுள்ளது.
அதன் வெளிப்பாடாய் தமிழகத் தேர்தல் களத்தில், சாதிய அடையாளமும், சாதிவாரி தொகுதிகளும் மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்து, தமிழர் ஓர்மை அரசியலுக்கு எதிரியாக நிற்கின்றன.
இந்தத் தேர்தல் களம் நமக்கு பல்வகைப்பட்ட அனுபவங்களையும் தந்திருக்கிறது. இன்று கசப்பானதாக இருக்கும் நமது அனுபவங்களே நாளை தமிழினத்திற்கான விடியலை பெற்றுத்தரும் பாடங்களாக நமக்கு அமையும் என நம்புவோம்.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று உலகத்தையும், அனைத்து உயிரினங்களையும் நேசித்த தமிழன் இன்று சாதியாகவும், மதமாகவும் கட்சியாகவும் பிரிந்து தனக்கான ,தனது சந்ததிக்கான தேவையறியாது வாழ்நாட்களைக் கடத்திக்கொண்டிருக்கிறான் என்பதையும் நாம் கண்கூடப் பார்த்தோம்.
நாம் நமது வருங்காலப் பிள்ளைகளுக்களின் வாழ்க்கைக்கான போராட்டத்தில் இருக்கிறோம். காலங்காலமாக மறுக்கப்பட்டு வரும் தமிழ்த் தேசிய இனத்தின் தன்னுரிமை அடைகிற இலட்சியப் பயணத்தில் இடையறாது பயணிக்கிறோம்.
இது பெரும் பயணம். பல தடைகளையும், சிக்கல்களையும் எதிர்நோக்கியே தொடர்ந்து பயணிக்கவேண்டும். இன்று நமக்கான தேர்தல் வெற்றி கனியாமல் இருக்கலாம். ஆனால் தமிழர் என்கிற மான உணர்ச்சியை கடைக்கோடி தமிழனின் உள்ளத்திலும் கூட இன்று நாம் வெற்றிக்கரமாக புகுத்தியிருக்கிறோம்.
சுடும் வெயிலில்,கொட்டும் வியர்வையில், பொருளாதார, சாதீய,மத பின்புலம் என எவையும் இல்லாது நாம் மேற்கொண்ட நம் இனநலனிற்கான நமது முயற்சிகள் வெற்றியடையாமல் போயிருக்கலாம்.
ஆனால் இன்று விதைத்து இருக்கும் தமிழின நலனிற்கான இந்த விதைப்பு இன்று இல்லாமல் போனாலும் ஒரு நாள் முளைத்தே தீரும். அன்றைய தினத்தில் நம்மை பீடித்திருக்கும் தேசிய,திராவிட,சாதி,மத .சுயநல,பிழைப்பு சக்திகள் நம்மை விட்டு அகலும்.
ஆகவே நாம்தமிழர் தம்பிகளும், தளபதிகளும் சற்றும் நம்பிக்கை இழக்காமல், ‘இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எங்கள் வழிகாட்டி’ என்ற தலைவரின் வரிகளை மனதிலே ஏந்தி, அடுத்தக்கட்ட நகர்வில் கவனம் செலுத்துவதே இனக்கடமையாகும்.
தமிழ்த்தேசிய இனத்தின் அனைத்து விதமான அடிமைத்தளைகளும் உடைத்து நொறுங்கும் வல்லமை நமக்குக் கையளிக்கப்பட்டுள்ளது. அது கைகூடும் வரையில் நமது இலட்சிய பயணம் தளராது தொடரும் என்று உறுதியேற்போம்.
கடந்த இரு மாதங்களாகத் தமிழகத்தெருக்களெங்கும் அயராது உழைத்த தம்பிகளும், தளபதிகளும் தொடர்ந்து மக்களைச் சந்தித்து அவர்களின் தேவைகளறிந்து துணைநிற்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
நாம் மக்களிடமிருந்து வந்தவர்கள், மக்களுக்காக வந்தவர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்துவதனூடாகவே தமிழக அரசியல் களத்தை வென்றெடுக்க முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
தமிழ்த்தேசிய கருத்தியலையும், தேசியத்தலைவர் பிரபாகரனையும் பட்டிதொட்டியெல்லாம் கொண்டுசேர்க்க உதவிய அனைவருக்கும், என் மனமார்ந்த புரட்சி வாழ்த்துக்களை மீண்டும் தெரிவிக்கிறேன்.
நடைப்பெற்று முடிந்திருக்கிற 2016 சட்டமன்ற தேர்தலில் மக்கள் அளித்திருக்கிற தீர்ப்பினை நாம் மதிக்கிறோம்.
மீண்டும் பதவியேற்கிற அதிமுக அரசிற்கு வாழ்த்துக்களைப் பதிவுசெய்கிறோம். தேர்தல் அறிக்கையில் அதிமுக வழங்கியுள்ள மதுவிலக்கு உள்ளிட்ட வாக்குறுதிகளைக் காலம் தாழ்த்தாமல் நிறைவேற்றுவதுதான் நம்பி வாக்களித்த மக்களுக்கு அதிமுக செய்கிற நன்றி கடன் ஆகும்.
மேலும் தமிழ்த்தேசிய இனத்தின் நீண்டகால கோரிக்கையான இராசீவ் கொலை வழக்கில் சிக்குண்டுள்ள ஏழு தமிழர் விடுதலையையும் பதவியேற்கிற புதிய அரசு உறுதியோடு காலம் தாழ்த்தாமல் நிகழ்த்திட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.
மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி என்கிற எங்களது முழக்கத்தினை மதித்து ,எங்கள் மீது நம்பிக்கை செலுத்தி வாக்களித்த என் தாய்த் தமிழ் உறவுகளுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் என் மனமார்ந்த நன்றிகள்.
இந்த நெருக்கடியான சூழலில் எங்களுக்குத் தோள் கொடுத்து, ஆதரித்து, ஊக்கமளித்து நின்ற உலகத்தமிழர்களுக்கு எங்கள் ஆழ்மன நன்றியறிதலை பதிவுசெய்கிறோம். புதிய அரசியல் சக்தியான எம்மை ஆதரித்த பத்திரிக்கை நண்பர்களுக்கு, தொலைக்காட்சி தோழர்களுக்கு, இணைய வழி உறவுகளுக்கு அனைவருக்கும் நாங்கள் இச்சமயத்தில் உளமார நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி.