Breaking News

மக்கள் நலக் கூட்டணி இப்படி கேவலமாகத் தோற்க என்ன காரணங்கள்?

இந்தத் தேர்தலும் அதிமுக - திமுக யுத்தமாகத்தான் முடிந்திருக்கிறது. மாற்று அரசியலுக்கான முயற்சி என்று வர்ணிக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணி, இந்தத் தேர்தலில், ஒரு இடத்தில் கூட முன்னிலைப் பெறவில்லை. 

திருமாவளவன் மட்டும் போராடி 87 வாக்குகளில் தோற்றுவிட்டார். கூட்டணியின் பிற வேட்பாளர்கள் - விஜயகாந்த்- உள்பட சொல்லிக்கொள்ளும் அளவுக்கு தோற்கவில்லை. மூன்றாவது நான்காவது இடங்களுக்குத் தள்ளப்பட்டனர். பெரும் எதிர்ப்பார்ப்புக்களுக்கு மத்தியில் தேர்தல் களத்தைச் சந்தித்தது மக்கள் நலக் கூட்டணி - தேமுதிக - தமாகா இணைந்த கூட்டணி. வைகோவின் ஒருங்கிணைப்பில் உருவான இந்தக் கூட்டணி, அதிமுக, திமுக இரு கட்சிகளுக்குமே ஒரு அச்சுறுத்தலாகவே அமைந்தது. திமுகவின் முதல் இலக்கு அதிமுக கூட இல்லை. 

இந்த மக்கள் நலக் கூட்டணிதான். இந்தக் கூட்டணிக்குக் காரணமான வைகோவின் மதிமுகவை துண்டாடும் வேலைகளை ஜரூராக மேற்கொண்டது. தங்கள் அணிக்கு வரவேண்டிய விஜயகாந்த், தடாலென மக்கள் நலக் கூட்டணியில் இணைந்ததை ஜீரணிக்கவே முடியவில்லை திமுகவால். அடுத்த நிமிடமே தேமுதிகவையும் உடைக்கும் வேலைகளை மிகத் தீவிரமாகச் செய்தது. இரண்டு மாதங்களுக்கு முந்தைய அந்தக் கதைகளெல்லாம் அத்தனை சுலபத்தில் யாரும் மறந்திருக்க முடியாது. 

மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் இணைந்த மக்கள் நலக் கூட்டணி இருந்த வரை, மதிப்பு மிக்க அணியாகத் திகழ்ந்தது. விஜயகாந்தின் தேமுதிக உள்ளே வந்தது கூட பிரச்சினையில்லை. ஆனால் விஜயகாந்தை கூட்டணித் தலைவராகவும் முதல்வர் வேட்பாளராகவும் அறிவித்ததுமே அந்தக் கூட்டணி மீதிருந்து மரியாதை கலகலக்க ஆரம்பித்துவிட்டது. இன்னொரு பக்கம் தேர்தல் பிரச்சாரக் களத்தில் ஜொலித்திருக்க வேண்டிய மநகூ தலைவர்கள் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானார்கள். 

இதனை சரியாகப் பயன்படுத்திக் கொண்டது திமுக. தம்மிடமிருக்கும் ஊடக பலத்தைக் கொண்டு மக்கள் நலக் கூட்டணியை மிக மிக மட்டமான கூட்டணியாகச் சித்தரித்தது. திமுக சார்பு ஊடகங்களின் இந்த சூழ்ச்சி புரிந்திருந்தும், நடு நிலை ஊடகங்கள் என தங்களைச் சொல்லிக் கொண்ட அனைத்துமே மக்கள் நலக் கூட்டணியை கேவலப்படுத்துவதையே குறியாகக் கொண்டு செயல்பட்டன. அதிமுகவின் பி டீம் என்று திமுகவினர் செய்த பிரச்சாரத்தையே இதர ஊடகங்களும் மேற்கொண்டதை அத்தனை லேசாக எடுத்துக் கொள்ள முடியாது. 

திமுகவும் மோசம், அதிமுகவும் மோசம்.. ஒரு மாற்றாக புதியவர்களுக்கு, இதுவரை பதவியில் இல்லாதவர்களுக்கு வாய்ப்புத் தரலாமே என்ற எண்ணமே மக்கள் மனதில் எழுந்துவிடாத அளவுக்கு தீவிரமாக திமுகவுக்கும் அதிமுகவும் உழைத்தன ஊடகங்கள் என்றால் மிகையல்ல. தமிழக அரசியலில் அதிமுக - திமுக போதும். வேறு எந்தக் கட்சியும் எடுபடாது என்ற பிரச்சாரம் செய்திகள், கட்டுரைகள், விவாதங்களில் வெளிப்பட்டதைப் பார்க்க முடிந்தது. மக்கள் நலக் கூட்டணி மோசமாகத் தோற்றுப்போக ஊடகங்கள் மட்டுமே காரணமா? என்ற கேள்வியை சிலர் முன் நிறுத்துகிறார்கள். 

இன்னும் சில காரணிகளும் இருக்கத்தான் செய்கின்றன. மறுப்பதற்கில்லை. அந்த அணியை ஒருங்கிணைக்க மிகப் பெரிய முயற்சியை மேற்கொண்ட வைகோ, தடாலென விஜயகாந்தை தலைவர் என்று சொன்னதை யாருமே ரசிக்கவில்லை, விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவைத் தவிர. இதுவே அந்தக் கூட்டணி மீது தனி பாசம் காட்டிய நடுநிலையாளர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்திவிட்டது. முதல்வர் வேட்பாளர் என வைகோ அல்லது திருமாவளவனை முன்னிறுத்தி, தேர்தல் களத்தில் வைகோவும் போட்டியிட்டிருந்தால் இந்த அணி மீதான இமேஜ் வேறு மாதிரி இருந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. 

அடுத்து இவர்கள் முதல்வர் வேட்பாளராக நிறுத்திய விஜயகாந்த் தேர்தல் மேடைகளில் அடித்த கூத்துகள். இப்படியெல்லாம் கேவலமான தேர்தல் மேடைகளை தமிழக வாக்காளர்கள் இதற்கு முன் பார்த்ததே இல்லை. இளம் வாக்காளர்களின் மீம்ஸ் வேட்கைக்கு சரியான தீனியாக அமைந்ததைத் தவிர வேறு பலனில்லை விஜயகாந்த் பிரச்சாரத்தால்! விஜயகாந்த் மனைவி பிரேமலதாவின் மேடைப் பேச்சுகள் எரிச்சலூட்டுபவையாகவே அமைந்துவிட்டன. 

அவர் பேசிய இடங்களிலெல்லாம் விழவிருந்து கொஞ்ச நஞ்ச ஓட்டுக்களும் அதிமுக பக்கம் போய்விட்டன என்பதுதான் நிஜம். நந்தவனத்தில் ஒரு ஆண்டி கதைதான். மிகச் சரியான ஆரம்பம்... திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சிறந்த கூட்டணி. ஆனால் முதல்வர் வேட்பாளரில் தொடங்கிய கோணல், மீடியாவின் எதிர்ப்புப் பிரச்சாரத்தின் தயவுடன் படுதோல்வியில் தள்ளிவிட்டது மக்கள் நலக் கூட்டணியை. இப்போது அவர்கள் முன் உள்ள சவால்... இந்தக் கூட்டணியை உள்ளாட்சித் தேர்தல் வரை கொண்டு போக வேண்டும். முடியுமா?