தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? இன்று வெளியாகிறது முடிவு
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை தீர்மானிக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த 232 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை தவிர 232 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 16-ஆம் திகதி நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு இயந்திரங்கள் சீலிடப்பட்டு, வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 68 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. பிற்பகலுக்குள் வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் வெளியாகும் என கூறப்படுகிறது.
இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது, வாக்கு எண்ணிக்கை மையங்களில் வீடியோ கண்காணிப்புடன் துணை இராணுவம், ஆயுத பொலிஸார், ஆயுதமில்லாத பொலிஸார் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிக வாக்குச்சாவடிகள் உள்ளன என்பதால் 24 மேசைகள் அமைக்கப்படுகின்றன.
இதேபோல, வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப 68 மையங்களிலும் 3,236 மேசைகள் அமைக்கப்படுகின்றன. மழையால் வாக்கு எண்ணும் பணி பாதிக்கப்படாது.
வாக்கு எண்ணும் பணியில் 9621 அதிகாரிகள் செயற்படுவார்கள். வாக்கு எண்ணும் இடத்தில் அடையாள அட்டை இல்லாதவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் கைபேசிக்கு அனுமதி இல்லை.ஒவ்வொரு மேசையிலும் ஒரு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருக்கும். ஒவ்வொரு மேசையிலும் நுண் பார்வையாளர்கள் கண்காணிப்பில் இருப்பார்கள்.
5 நிமிடத்துக்கு ஒரு முறை முடிவு விவரங்கள் தேர்தல் ஆணைய இணைய தளத்தில் வெளியிடப்படும். வேட்பாளரின் வெற்றி வித்தியாசம் குறைவாக இருந்தால் தபால் வாக்குகள் மீண்டும் எண்ணப்படும் என்றார்.இதேவேளை அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளில் நடைபெற்ற பணப்பட்டுவாடா குறித்து ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட விசாரணை குழுவை தேர்தல் ஆணையம் நேற்று அமைத்துள்ளது.
பணப்பட்டுவாடா தொடர்பாக அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய 2 தொகுதிகளுக்கான தேர்தலை தலைமை தேர்தல் ஆணையம் எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் அமைத்துள்ள இந்த குழு இன்று மாலை 4 மணிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த 2 தொகுதிகளிலும் வேறு என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதற்காக இந்த விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.