Breaking News

தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறார் ஜெயலலிதா



தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள முடிவுகள் மற்றும் முன்னணி நிலவரங்களின் அடிப்படையில், முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் நி்லையில் உள்ளது.

இன்று காலை வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக முன்னணி நிலையை அடைந்தது.

தற்போதைய நிலையில், 130 தொகுதிகளில், அதிமுக முன்னணியில் உள்ளது. திமுக 95 இடங்களில் முன்னணியில் உள்ளது.

இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளில், அதிமுக 3 தொகுதிகளிலும், திமுக 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

இந்த தேர்தலில் போட்டியிட்ட முதலமைச்சர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.பன்னீர்செல்வம், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், உள்ளிட்டவர்கள் முன்னிலையில் உள்ளனர்.

அதேவேளை, இந்த தேர்தலில் தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி, தமாக இணைந்து அமைத்த மூன்றாவது அணி படுதோல்வி காணும் நிலையில் உள்ளது. இதன் தலைவர்களான விஜயகாந்த், தொல். திருமாவளவன் உள்ளிட்டவர்கள் பின்னடைவு கண்டுள்ளனர்.

தற்போதைய நிலையில் அதிமுக அறுதிப் பெரும்பான்மை ஆசனங்களுடன் ஆட்சிமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1984ஆம் ஆண்டுக்குப் பின்னர், தொடர்ந்து இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற வரலாற்றை அதிமுக மீண்டும் படைக்கவுள்ளது.

இதனிடையே, இந்த தேர்தலில் வெற்றி பெற்ற முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.