யுத்த வெற்றி மகிழ்ச்சியளித்தாலும் மரணங்கள் கவலையளிக்கின்றன
போர் வெற்றி ஒருபுறம் மகிழ்ச்சியை கொடுத்தாலும் மறுபுறம் மரணங்கள் கவலையளிப்பதாகவே உள்ளன. கல், மண், சீமெந்தைக் கொண்டு தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப முடியாது. தமிழ், சிங்கள மக்களின் இதயங்களை இணைப்பதன் மூலமே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
எந்தச் சவால்கள் வந்தாலும் இனங்களுக்கிடையே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நாட்டில் மீண்டுமொரு யுத்தம் ஏற்படாத நிலைமையை அரசாங்கம் ஏற்படுத்தும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தேசிய படைவீரர்கள் தினம் மற்றும் யுத்தத்தில் உயிரிழந்த படைவீரர்களை நினைவுகூரூம் தினம் நேற்று புதன்கிழமை பாராளுமன்ற மைதானத்திலுள்ள படையினர் நினைவு தூபிக்கு முன்பாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
ஜனாதிபதி இங்க தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இன்று நேற்றல்ல வரலாற்றுக் காலம் தொடக்கம் சிங்கள, தமிழ் மக்களுக்கிடையே கருத்து முரண்பாடுகளும், மோதல்களும் இடம்பெற்றுள்ளன. இன்று யுத்தம் முடிந்து நாட்டில் சமாதானம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இனங்களுக்கிடையே அவசர அவசரமாக நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியாது. அரசாங்கம் சர்வதேச உதவியுடன் இனங்களிடேயே நல்லிணக்கத்தை ஏற்படுத்தி மீண்டுமொரு யுத்தம் ஏற்படுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது.
இது இலகுவானதல்ல. கடுமையான சவால் மிக்கது. அதனால் அரசாங்கம் இதனை ஒருபோதும் கைவிடமாட்டாது.நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு யுத்தத்தின் பின்னரான மீளிணக்கம் மற்றும் மீள் கட்டுமானப்பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட வேண்டும். இதனை கல், சீமெந்து, மணலினால் மட்டும் கட்டியெழுப்ப முடியாது.
தமிழ் சிங்கள மக்களின் இதயங்களை இணைத்து முரண்பாடுகளை கலைக்க வேண்டும். யுத்தத்தில் வெற்றியடைந்தபோது சிங்க கொடிகளை அசைத்து மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டோம். அவ்வாறு மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டபோது மறுபுறம் இந்த யுத்தத்தால் ஒரு இலட்சம் மக்களும் மற்றும் படையினரும் உயிரிழந்தனர், அங்கவீனமுற்றனர். இது எமக்கு கவலையளிக்கின்ற விடயமாகும்.
வரலாற்று காலம் தொடக்கம் இலங்கையில் இனங்களுக்கிடையே ஏற்பட்ட மோதல்களையும் முரண்பாடுகளையும் கலைந்து நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது மிகவும் சவால் மிக்க காரியமாகவே இருந்துள்ளது. அதனை இன்று நாம் முன்னெடுத்து வருகின்றோம்.
நாட்டில் மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள், ஜனநாயக உரிமைகளை அரசாங்கம் படிப்படியாக நிறைவேற்றி வருகின்றது. இன்று ஒருசிலர் எம்மை விமர்சிக்கின்றனர். இந்த விமர்சனங்களின் பின்னால் உள்ளவர்கள் யுத்தத்தை முன்னெடுத்த படையினரை சிறையில் தள்ளி அவர்களுக்கு சிறை உடையை வழங்கியவர்கள். இவ்வாறானவர்களே இன்று எம்மை விமர்சிக்கின்றனர்.
கடந்த காலங்களில் கற்ற பாடங்களை கொண்டு எதிர்காலத்தில் தேசிய நல்லிணக்கம் பலப்படுத்தப்படும். சீரற்ற காலநிலையால் பல மரணங்கள் ஏற்பட்டுள்ளதோடு, பொது மக்கள் பெரும் சிரமங்களை அனுபவிக்கின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதோடு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது கவலையை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.
இந் நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அமைச்சர்கள், மாகாண சபை முதலமைச்சர்கள், ஆளுநர்கள், முப்படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர், சர்வ மதத் தலைவரகள், உயிரிழந்த படையினரின் பெற்றோர், உறவினர்கள் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி, பிரதமர், முப்படை முக்கியஸ்தர்கள் நினைவு தூபிக்கு மலர் வலயம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் படை அணிவகுப்போடு, மிக கோலாகலமாக வெற்றி விழாவாக நடத்தப்பட்டது. ஆனால் இம்முறை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மிக எளிமையாக படையினரின் மரியாதைகளுடனும், மத அனுஸ்டானங்களுடனும் மிகவும் எளிமையாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
அதேவேளை அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா பீல்ட் மாரம்சலுக்குரிய இராணுவ உடையணிந்து நேற்றை நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.