பெருக்கெடுத்துப் பாயும் களனி கங்கை – வெள்ளத்தில் மூழ்கும் கொழும்பு நகரப்பகுதிகள்
கடந்த நான்கு நாட்களாகப் பெய்து வரும் கனமழையால், களனி கங்கையில் நீர்மட்டம் 7 மீற்றர் வரை அதிகரித்து, கொழும்பு நகரின் பல்வேறு பகுதிகளையும் நீரில் மூழ்கடித்துள்ளது.
மழைவெள்ளம் பாய்ந்தோடுவதால் களனி கங்கையின் நீர்மட்டம் சில நாட்களுக்குள் சடுதியாக, 7 மீற்றர் அதிகரித்துள்ளது.இதனால், களனி கங்கையின் கரையோரமாக வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அதேவேளை, களனி கங்கையில் பெருக்கெடுத்த வெள்ளத்தினால், கொழும்பு நகரின் பகுதிகளான, வெல்லம்பிட்டிய, கொலன்னாவ, கொட்டிகாவத்தை, மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் வீடுகள், வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வெள்ளத்துடன் முதலைகளும் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.வெள்ளத்தினால் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.