Breaking News

கேகாலை நிலச்சரிவில் 16 சடலங்கள் மீட்பு – 200 குடும்பங்கள் மாயம்?



கேகாலை மாவட்டத்தில் உள்ள அரநாயக்க பகுதியில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில், புதைந்து போன மூன்று கிராமங்களில் இருந்து, 13 சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.

அரநாயக்க பகுதியில் உள்ள சிறிபுர, பல்லேகபே, எலகிபிட்டிய ஆகிய மூன்று கிராமங்களும் நேற்றுமாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்து போயின.

இங்கிருந்த 200 வரையான குடும்பங்கள் காணாமற்போயிருப்பதாக சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. நிலச்சரிவில் சிக்கிய 180 பேர் மாத்திரம் மீட்கப்பட்டுள்ளனர்.

அனர்த்தம் ஏற்பட்டதும், சிறிலங்கா இராணுவ கொமாண்டோக்களும் படையினருமாக 280 பேர், மோப்ப நாய்களுடன் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


இன்று காலை நடந்த மீட்புப்பணியில் 13 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அதேவேளை இன்று அதிகாலை கேகாலை மாவட்டத்தில் உள்ள களுபஹவத்தை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 16 பேர் காணாமற்போயுள்ளனர். இவர்களில் மூவரின் சடலங்களும் இன்று மீட்கப்பட்டுள்ளன.

முப்படையினர் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.