Breaking News

சரணடைந்தோரின் விபரம் ஜுலை 14ஆம் திகதி சமர்பிக்குக;நீதிமன்றம் உத்தரவு



தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த எழிலன் உட்பட இறுதிப் போரில் சரணடைந்தவர்களின் விபரங்கள் எதிர்வரும் ஜுலை மாதம் 14ஆம் திகதி நிச்சயம் சமர்பிக்கப்பட வேண்டும் என்று முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்துடன் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முல்லைத்தீவு 58ஆம் படைத்தளத்தின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சாணக்ய குணவர்தன அடுத்த அமர்வில் மன்றில் முன்னிலையாகத் தவறினால் பிடியாணை பிறப்பிக்கப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரிக்கையுடன் உத்தரவிட்டது.

விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த எழிலன் என்ற சின்னத்துரை சசிதரன் உட்பட இறுதிப்போரில் சரணடைந்தவர்களின் விபரங்களை வெளியிடுமாறுகோரி வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று வியாழக்கிழமை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் நடைபெற்றது.

இந்த விசாரணையில் சரணடைந்தவர்களின் விபரங்கள் அனைத்தும் சமர்பிக்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்த போதிலும் மேஜர் ஜெனரல் சாணக்ய குணவர்தனவும், அவர் சார்பிலான சட்டத்தரணியும் இன்றைய தினம் மன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை.

சட்டத்தரணி வெளிநாடு சென்றிருப்பதனால் மன்றில் பிரசன்னமாக முடியாதுபோனதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தென்னிலங்கையில் வெள்ளம் காரணமாக முல்லைத்தீவு 58ஆம் படைத்தளத்தின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சாணக்ய குணவர்தனவிற்கும் இன்றைய வழக்கு விசாரணையில் முன்னிலையாக முடியாமற்போனதாக அறிவிக்கப்பட்டது. 

இதன்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு சட்டத்தரணி இரத்தினவேல், வெகு தூரத்திலிருந்து மனுதாரரும், அவர் சார்பானவர்களும் பேரூந்தில் வந்து பிரசன்னமாகியிருக்கும் நிலையில் சகல வசதிகள் இருந்தும் எதிர்தரப்பினர் மன்றில் முன்னிலையாகத்தவறியமை குறித்து தனது ஆட்சேபனையை வெளியிட்டார்.

இதனை கவனத்திற்கொண்ட நீதிபதி சம்சுதீன், வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜுலை மாதம் 14ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.அடுத்த விசாரணையின்போது மேஜர் ஜெனரல் சாணக்ய குணவர்தன முன்னிலையாகத் தவறினால் பிடியாணை பிறப்பிக்கப்படும் என்றும், அன்றைய தினம் சரணடைந்தவர்கள் தொடர்பான விபரங்களும் மன்றில் சமர்பிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.