ராஜீவ் படுகொலை : பதறவைக்கும் 10 மர்மங்கள்
'ராஜீவ் காந்தி படுகொலையின் நேரடி சாட்சியான 'புகைப்பிடிப்பாளர் ஹரிபாபு உயிரோடு இருக்கிறார்' என்று வெளியாகிய செய்திக்கு பலரும் மறுப்பு தெரிவித்ததோடு அவர் 'உயிரோடு இருக்க வாய்ப்பில்லை' என்ற கருத்தை ராஜீவ் கொலை வழக்கின் தலைமை விசாரணை அதிகாரியான ரகோத்தமன் மற்றும் தடயவியல் துறை பேராசிரியர் சந்திரசேகர் ஆகியோர் வலியுறுத்தினர்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலை ராஜீவ் படுகொலை தொடர்பான மர்மங்கள் குறித்த ஆவணப்படம் ஈரோட்டில் வைத்து ஆவணப்படக் குழுவினரால் வெளியிடப்பட்டது. ராஜீவ் காந்தி படுகொலையின் மர்மங்கள் குறித்து 'பைபாஸ்' என்ற தலைப்பில் குறித்த ஆவணப்படத்தை ரமேஷ் மற்றும் புகழேந்தி ஆகிய மருத்துவர்கள் எடுத்துள்ளதோடு இவ் ஆவணப்படத்தை திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி முன்னிலையில் வெளியிட்டனர்.
ஆவணப்படம் பற்றிகொளத்தூர் மணி கருத்து தெரிவிக்கையில், "பல புதிய ஆதாரங்களையும் புதிய செய்திகளையும் உலகுக்குச் சொல்கிறது இந்த ஆவணப்படம். இதுவரையில் ராஜீவ்காந்தி படுகொலையின் மர்மம் குறித்து வெளியான செய்திகளைவிட, இது முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது. புலனாய்வு அதிகாரிகளின் விசாரணை குளறுபடிகள், ஏன் அவ்வாறு செய்தார்கள்? பொலிஸாரின் கடுமையான, மிக மோசமான தவறுகள் என அனைத்தையும், விசாரணையின் ஆவணங்களில் இருந்தே சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.
ஒரு கொலை வழக்கில் புதிய ஆதாரங்கள் கிடைத்தால், குற்றவாளி என்று சொல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய முடியும். ஆவணப்படத்தில் காட்டப்படும் ஆதாரங்களைக் கொண்டே, இந்திய நீதித்துறையின் மரபை உடைக்கும் வகையில், புதிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். ஆட்சியாளர்கள் அதற்காகப் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஏழு பேரையும் சட்டப்பிரிவு 72 மற்றும் 161 ஆவது பிரிவுகளின்படி விடுதலை செய்ய வேண்டும். 'பைபாஸ்' ஆவணப்படம் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கின் மிக முக்கியமான ஆவணம்" என்றார்.
ஆவணப்படம் சொல்லும் ஆதாரங்களை மறுத்துப் பேசிய சி.பி.ஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமனும், தடயவியல் துறை பேராசிரியர் சந்திரசேகரும், " சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்டது ஹரிபாபுவின் உடல்தான். சிறுநீரகக் கோளாறு காரணமாக சிறுவயதிலேயே அவர் சுன்னத் செய்திருந்தார். அவரது பெற்றோர்தான் உடலை அடையாளம் காட்டினார்கள். சம்பவ இடத்தில் ஹரிபாபு சடலமாக இருக்கும் படம் விகடனிலும் வெளியாகி இருந்தது" என்கின்றனர். ஆனால், ஆவணப்படம் எழுப்பும் சந்தேகங்கள் அதிர வைக்கின்றன.
1. மே மாதம் 21-ஆம் திகதி இரவு 10.20 மணிக்கு, ராஜீவ் காந்தி படுகொலை சம்பவம் நடந்தது. இரவு 10.35 மணிக்கெல்லாம், 'ராஜீவ்காந்தி இறந்துவிட்டார்' என்பதை உறுதி செய்துவிட்டார்கள். 22-ஆம் திகதி மதியம் 3 மணிக்கு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில், ஒரு சடலத்திற்கு பிரேதபரிசோதனை நடத்தப்பட்டது. அந்த நிமிடம் வரையில் அந்த சடலத்துக்கு யாருமே உரிமை கொண்டாட வரவில்லை. 23-ஆம் திகதிதான் அது ஹரிபாபுவின் உடல் என அவரது தந்தை சுந்தரமணி உரிமை கொண்டாடினார். ஒருநாள் முழுவதும் அவர்கள் வராமல் இருந்தது ஏன்?
2. ஹரிபாபு என்று இவர்கள் சொல்லும் உடலில், 'முகம் முழுவதும் எரிந்து போய்விட்டது. அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்து போய்விட்டது' என்கிறார்கள். பிறகு எப்படி ஹரிபாபுதான் என உறுதியாக நம்பினார்கள்?
3. படுகொலை நிகழ்ந்த இடத்தில், ஹரிபாபு விழுந்து கிடக்கும் புகைப்படம் விகடனில் வெளியானது. அந்தப் புகைப்படத்தில் அவரது முகம் தெளிவாக இருக்கிறது. ஆனால், போஸ்ட்மார்ட்டம் அறிக்கையில், 'முகம் முற்றிலும் சிதைந்துபோய்விட்டது. அடையாளம் காணமுடியவில்லை' எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கையை புலனாய்வு அதிகாரிகள் படித்துப் பார்க்கவில்லையா? சம்பவ இடத்தில் ஹரிபாபு மயக்க நிலையில் இருந்தபோது, இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கலாம் என ஆவணப்படக் குழு சொல்கிறது. பிறகு எப்படி அந்த சடலத்தின் முகம் சிதைந்து போனது? மயக்க நிலையில் இருந்த அவருக்கு, சிகிச்சை அளித்து தப்ப வைத்துவிட்டு, முற்றிலும் சிதைந்து போன ஒரு முகத்தைக் காட்டி, 'இது ஹரிபாபுவின் உடல்' என மற்றவர்களை நம்ப வைத்திருக்கிறது பொலிஸ் என்கிறது ஆவணப்படக் குழு.
4. ஹரிபாபு எனக்காட்டப்பட்ட உடலில் இருந்து தனியாக தலையை துண்டித்து எடுக்க என்ன காரணம்? சூப்பர் இம்போஷிசன் முறையில் அடையாளம் காண முடியும் என்பதால்தான் தலை துண்டிக்கப்பட்டது என அதிகாரிகள் சொல்கிறார்கள். இதை ஏற்றுக் கொண்டாலும், ஹரிபாபுவுக்கு அப்போது 22 வயதுதான். போஸ்ட்மார்ட்டம் அறிக்கையில் 30 வயது எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்படியானால், இறந்து கிடந்தது யார்?
5. ஹரிபாபுவின் அப்பா சுந்தரமணியிடம், சடலத்தைக் காட்டியபோது தலையில்லாத முண்டமாகத்தான் உடல் இருந்துள்ளது. அந்த சடலத்தின் உடலில் நீலக்கலர் காற்சட்டை போடப்பட்டிருந்தது. இது ஒன்றுதான் ஹரிபாபு எனக் கண்டறியக் காரணம் என்கிறார்கள். ஆனால், வீட்டில் இருந்து கிளம்பிய போது, ஹரிபாபு கிரீம் கலர் சட்டை அணிந்திருந்தார். சடலத்தில் பச்சை நிறக் கலர் சட்டை இருந்தது. இந்தக் கேள்வியை ஹரிபாபுவின் அக்கா பதிவு செய்திருக்கிறார். இந்தக் குளறுபடி ஏன்?
6. அந்த சடலத்திற்கு ஏற்கனவே, சுன்னத் செய்யப்பட்டிருக்கிறது என்றால், உடலுக்கு உரிமை கோருபவர்களிடம், 'உங்கள் பையனுக்கு சுன்னத் செய்தீர்களா?' என்ற அடிப்படைக் கேள்வியை பொலிஸார் கேட்டிருக்க வேண்டும். அப்படி எங்குமே கேட்கவில்லை. ஆவணத்தின் எந்தப் பக்கத்திலும் சிறுவயதில் ஹரிபாபுவுக்கு சுன்னத் செய்யப்பட்டிருந்தது எனவும் பதிவாகவில்லை. சாதாரண ஒரு சடலத்தையே பல கேள்விகளுக்குப் பிறகுதான் உரியவர்களிடம் ஒப்படைப்பார்கள். ஹரிபாபு சடலம் என்பது மிகப் பெரிய படுகொலைக்குப் பின்னால் இருக்கும் முக்கியமான சாட்சி. இந்த விஷயத்தில் பொலிஸார் வேண்டுமென்றே தவறு செய்தார்களா?
7. ஆவணப்படத்தில் இருக்கும் இன்னொரு முக்கிய ஆதாரம். ஹரிபாபுவின் பக்கத்திலேயே ஜெயபாலன் என்பவர் புகைப்படம் எடுப்பதற்காக நின்றிருக்கிறார். இவர் இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் ட்ரூப்பில் புகைப்படக்காரராக இருந்தவர். ''ஹரிபாபுவின் தோள்பட்டையை துணையாக (சப்போர்ட்டாக) வைத்துக் கொண்டு படம் எடுத்தேன். சம்பவ இடத்தில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. விழித்தபோது வீட்டில் இருந்தேன்.
என் ட்ரூப்பில் இருந்தவர்கள் என்னை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போய் சிகிச்சை அளித்திருக்கிறார்கள்''என அவர் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இவர் முகத்திலும் காயம் ஏற்பட்டிருந்தது. அவருடைய கேமராவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இவரோடு ஹரிபாபுவும் சம்பவ இடத்தில் மயக்க நிலையில்தான் இருந்திருக்கிறார் என்கிறது ஆவணப்படக் குழு. இது உண்மையா?
8. சடலத்தை ஹரிபாபுவின் பெற்றோரிடம் கொடுத்த பொலிஸார், 'உடலை புதைக்கத்தான் வேண்டும். எரிக்கக் கூடாது' என உறுதியாகக் கூறியதாகவும், 'அதையும் மீறி அவர்கள் எரித்துவிட்டதாக' இவ்வழக்கு தொடர்பான பொலிஸின் ஆவணம் சொல்கிறது. பொலிஸார் அவ்வாறு உறுதிபடக் கூறிய பின்பும், சடலம் எரியூட்டப்பட்டது ஏன்? புதைத்திருந்தால், எலும்பு சோதனையில் உண்மை வெளியாகும் என பொலிஸார் விழிப்போடு செயல்பட்டார்கள் என்கிறார்கள். ராஜீவ்காந்தி நடந்து வரும்போது பூ போட்டவர்கள் இடதுபக்கம் நின்றிருந்தார்கள். அவர்கள் இருவரும் முஸ்லிம்கள். இதில் இறந்து போன ஒரு முஸ்லிம் இளைஞரை ஹரிபாபு என நம்ப வைத்துவிட்டார்கள் என்கிறார்கள். இது உண்மையா?
9. படுகொலை சம்பவத்தை புலனாய்வு செய்த அதிகாரிகள் கார்பெட்டின் கீழ், பூ மாலையில் வெடிகுண்டு, பூக்கூடையில் பாம், கடைசியாக மனித வெடிகுண்டு என நான்கு தியரிகளை முன்வைத்தார்கள். இதில், பூ போடுவதற்கான வேலையைச் செய்த சுலைமான் சேட்டிடம், 'நாங்கள் சொல்வதுபடி கேட்காவிட்டால் பூக்கூடையில் பாம் எனக் கதைகட்டிவிடுவோம்' என பொலிஸார் மிரட்டியிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான் இறந்துபோன இஸ்லாமியரின் உடலை 'கிளைம்' செய்வதற்கு யாரும் முன்வரவில்லை. அதையே ஹரிபாபுவின் உடலாக சித்திரித்து வெளியுலகை நம்ப வைத்துவிட்டார்கள். ஓரளவு சிதைந்திருந்த அந்த முகத்தை, பொலிஸாரே முற்றிலும் சிதைத்திருக்கலாம் என்கிறது ஆவணப்படக் குழு.
10. ஜெயின் கமிஷன் மற்றும் வர்மா கமிஷனில் இரண்டு வீடியோக்கள் ஆதாரமாகக் காட்டப்பட்டிருக்கின்றன. அந்த வீடியோக்களில், ராஜீவ்காந்திக்கு மாலை போடும் நேரத்தில் மட்டும் கோளாறு செய்திருக்கிறார்கள். அதாவது அந்தக் காட்சியை மட்டும் அழித்திருக்கிறார்கள். இதுபற்றி நீதிமன்றம் கேட்டபோது, 'நாங்கள் வைத்திருந்தோம். மழை வந்து பூஞ்சை படிந்ததால் அந்தப் பகுதி அழிந்துவிட்டது' என காரணம் சொல்லியிருக்கிறார்கள். இந்த வழக்கில் ஆதாரங்களை அழிப்பதில் கூடுதல் அக்கறை காட்டியிருக்கிறது புலனாய்வுத்துறை என்கிறார்கள் ஆவணப்படத்தை இயக்கிய மருத்துவர்கள்.
இந்நிலையில் இணைய உலகில் 'பைபாஸ்' படத்தை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக பதிவேற்றியுள்ளார்கள் ஆவணப்படக் குழுவினர். ஈரோட்டில், கலர் பலூன்களோடு இவ் ஆவணப்படத்தின் சி.டியை மேகக் கூட்டங்களோடு கலக்க வைத்தனர். 1991ஆம் ஆண்டு இதேநாள் இரவில்தான் (மே 21) மனித வெடிகுண்டுக்கு பலியானார் ராஜீவ்காந்தி.
ஆ.விஜயானந்த்