வடமாகாண சபையின் தீர்வுத்திட்ட வரைவு இன்று சமர்பிப்பு
புதிய அரசியலமைப்பு தொடர்பாக வடக்கு மக்களின் எதிர்பார்ப்பை கூறுவதற்காக வட மாகாண சபையினால் உருவாக்கப்பட்டுள்ள தீர்வு திட்ட முதல் வரைபு இன்று வியாழக்கிழமை வட மாகாண சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் – கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையின் கட்டிடத்தில் மாகாண சபை அமர்வு இன்று நடைபெறவுள்ளது.இலங்கையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக மக்கள் கருத்தறியும் குழுவொன்று நியமிக்கப்பட்டதோடு, ஸ்ரீலங்கா வரலாற்றில் முதன்முறையாக நாடாளுமன்றமும் அரசியலமைப்புச் சபையாக மாற்றம் பெற்றது.இந்த நிலையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து வட மாகாண தமிழ் மக்களின் விருப்புக்களை தெரிவிப்பதற்காக வட மாகாண சபையினால் 19 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த குழு தமிழ் மக்களின் வரலாற்றை அடிப்படையாக கொண்டும், தமிழ் மக்களின் அரசியல் விடயங்களை அடிப்படையாக கொண்டும் கொள்கை ரீதியான விடயங்களை அடிப்படையாக கொண்டும் ஒரு தீர்வு திட்டத்தை தயாரித்துள்ளது.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட தீர்வு திட்டம் இன்றைய தினம் வட மாகாண சபையில் உறுப்பினர்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.