தற்கொலை அங்கி சூத்திரதாரி பிரபாகரனின் நெருங்கிய நண்பராம்!
சாவகச்சேரி பிரதேசத்தில் தற்கொலை அங்கியுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விடுதலை புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சந்தேகநபர் வாகனம் நிறுத்தும் இடத்தில் இருந்து குண்டொன்று கிடைத்ததாக குறிப்பிட்டுள்ளார். தான் கடற்றொழில் ஈடுபடுகின்றமையினால் மீன்களை கொல்வதற்கு வெடி பொருட்கள் பயன்படுத்த முடியும் என்பதால் தான் அதனை எடுத்து கொண்டதாக கூறியுள்ளர்.
எப்படியிருப்பினும் தற்போது வரையில் குறித்த சந்தேக நபர் வேறு ஒரு வாக்குமூலத்தை வழங்கியுள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
சாவகச்சேரி பிரதேசத்தில் மணலுக்கு கீழ் இருந்து இந்த வெடி பொருட்கள் கிடைத்துள்ளதாக தற்போது கூறியுள்ளார். அதன் பின்னர் பொலிஸ் அதிகாரிகள் குறித்த சந்தேக நபரை அவ்விடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
எனினும் அந்த இடத்தில் இருந்து வெடிபொருட்கள் பெற்றுக் கொள்ளப்பட்டதற்கான எவ்விதமான சாட்சிகளும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எப்படியிருப்பினும் இந்த சந்தேகநபர் பல முறை பொலிஸாரை வேறு திசைக்கு திருப்பும் நோக்கில் முரண்பாடான வாக்குமூலங்களை வழங்கி வருகின்றார்.
சம்பவம் தொடர்பில் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது. மீட்கப்பட்ட வெடிபொருட்கள் தற்போது வரையில் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாளை அல்லது நாளை மறுதினம் இது தொடர்பில் அறிக்கை கிடைக்கப்படும் என நம்பப்படுகின்றது.
அண்மையில் சாவகச்சேரியில் தற்கொலை அங்கியுடன் வெடி பொருட்களும் மீட்கப்பட்டன. இது தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் என்ற போர்வையில் பல்வேறு ஊடகங்கள் பல கதைகளை அரங்கேற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது