தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கோரிக்கை
வரும் சட்டமன்றத் தேர்தலை தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் ஆதரவு தெரிவிக்கும் களமாக பயன்படுத்துமாறு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளையும் மக்களையும் கோரியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், மூன்று நிலைப்பாடுகளையும் தங்கள் தேர்தல் அறிக்கையில் உள்ளடக்குமாறு,அரசியல் கட்சிகளிடம் தோழமையோடு கோரியுள்ளது.
எதிர்வரும் மே மாதத்தில் நடைபெறவுள்ள தமிழ் நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-
தமிழ்நாட்டு மக்கள் தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் இணைபிரியாத அங்கமாக உள்ளார்கள். அதன் அடிப்படையில் எதிர்வரும் மே மாதம் 16 ஆம் நாள் நடைபெறவுள்ள தமிழ் நாடு சட்டப்பேரவைக்கான தேர்தலில் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் ஈழத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை வலுப்படுத்தும் வகையிலான நிலைப்பாடுகளைத் தங்கள் தேர்தல் அறிக்கையில் உள்ளடக்குவார்கள் என நாம் உறுதியாக நம்புகிறோம்.
தமிழக மக்களும் எவ்வாறு தங்கள் வாக்குகளை அளிப்பது தொடர்பான தீர்மானத்தை எடுக்கும்போது தமிழீழ மக்களின் விடுதலையையும் முக்கிய விடயமாகக் கவனத்தில் கொள்வார்கள் என்பதும் எமது உறுதியான நம்புகிறோம்.
தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் தற்போது சவாலான சூழலொன்றை எதிர் கொண்டுள்ளது. தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வு என சிங்கள தேசம் தீர்மானிக்கும் ஒற்றையாட்சிமுறையினைத் தமிழர் மீது திணிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அனைத்துலக சமூகத்தினிடையே பலம்மிக்க சில நாடுகள் தமது நலன்களின் அடிப்படையில் அநீதியான இந்த நடைமுறைக்குத் துணைபோகும் நிலைமையே தற்போது காணப்படுகின்றது. சிறிய மக்கள்தொகையினைக் கொண்ட ஈழத் தமிழர் தேசத்துடன் நீதியின் அடிப்படையில் உறவாடுவதனைவிட சிங்கள தேசத்துடனும் சிறிலங்கா அரசுடனும் நலன்களின் அடிப்படையில் உறவாடி அதன் மூலம் தமது நலன்களை அடைந்து கொள்வதனையே அனைத்துலக அரசுகள் விரும்புகின்றன. இந்திய மத்திய அரசின் நிலையும் இதுவாகவே உள்ளது.
இந் நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால் தமிழக மக்கள் ஈழத் தமிழ் மக்களுடன் உறுதியாகக் கைகோர்த்து நிற்க வேண்டும். ஈழத் தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தைத் தமிழக மக்கள் தமது போராட்டமாகக் கையிலெடுக்க வேண்டும். தற்போது ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு தமிழகக் கட்சிகளின் ஆதரவு தேவையற்றதாயினும் பலம்மிக்க ஒரு மாநிலத்தின் உணர்வுகளை மத்திய அரசால் அலட்சியம் செய்துவிட முடியாது. தமிழக மக்கள் தமது அரசியற் செயற்பாடுகளின் ஊடாக இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுமானால் ஈழத் தமிழ் மக்களுக்குச் சாதகமான அனைத்துலகச் சூழல் உருவாகும்.
தமிழக அரசியல் கட்சிகளும் மக்களும் எதிர்வரும் மே மாதம் 16 ஆம் நாளில் நடைபெறவுள்ள தமிழ் நாடு சட்டப்பேரவைக்கான தேர்தலைத் தமிழீழ மக்களுக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் ஆதரவு தெரிவிக்கும் களமாகப் பயன்படுத்த வேண்டும் என நாம் வேண்டுதல் செய்கிறோம். இதன் பொருட்டு பின்வரும் மூன்று நிலைப்பாடுகளையும் தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் உள்ளடக்க வேண்டும் எனவும் தோழமையுடன் நாம் கோருகிறோம்.
தமிழீழ மக்களின் தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசு உட்பட்ட தீர்வு வடிவங்களைக் கொண்டதொரு மக்கள் வாக்கெடுப்பு ஈழத் தாயகத்திலும் புலம் பெயர்ந்தும் வாழும் தமிழ் மக்கள் மத்தியிலும் அனைத்துலக சமூகத்தின் பங்குபற்றுதலோடு நடைபெற வேண்டும்.
சிறிலங்கா அரசினது ஈழத் தமிழர் தேசம் மீதான இனஅழிப்பினை அனைத்துலகக் குற்றவியல் நீதீமன்றம் அல்லது அதற்கு நிகரான அனைத்துலக நீதி விசாரணைப் பொறிமுறையின் ஊடாக விசாரணைக்குட்படுத்தி, பரிகார நீதியின் அடிப்படையில் ஈழத் தமிழ் மக்களுக்குரிய நீதி வழங்கப்பட வேண்டும்.
தமிழ் நாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள ஈழத் தமிழ் மக்களின் நலன்கள் இந்திய அரசாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்துலக மனித உரிமைகள் சாசனத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார உரிமைகளின் அடிப்படையில் பேணப்படுவதை உறுதிப்படுத்துவதுடன் அவர்கள் விரும்பும் பட்சத்தில் இரட்டைக் குடியுரிமை (dual citizenship) வழங்கப்படுவதும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
இந் நிலைப்பாடுகள் எல்லாமே அனைத்துத் தமிழக அரசியல் கட்சிகளுக்கும் ஏற்புடையவை எனவே நாம் நம்புகிறோம். இவற்றுள் முதல் இரண்டு கோரிக்கைகள் சார்ந்த தீர்மானங்கள் தமிழ் நாடு சட்டப் பேரவையில் அனைத்துக் கட்சிகளது சம்மதத்தோடும் ஏற்கெனவே ஒருமனதாக நிறைவேற்றப்பட்டவையே. இத்தகைய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள போதும் அவற்றினை இந்திய மத்திய அரசு ஏற்கச் செய்வதற்கான செயற்பாடுகள் தமிழகத்தில் போதியளவு நடைபெறவில்லை என்ற கவலை எமக்கு உண்டு. வரவுள்ள தேர்தலின்போது இந் நிலைப்பாடுகள் குறித்துத் தமது செயற்பாட்டுத் திட்டங்களையும் அரசியற் கட்சிகள் தமது தேர்தல் அறிக்கையில் உள்ளடக்க வேண்டும் என்று நாம் அன்புடன் கோருகிறோம்.
தமிழ் நாட்டு மக்கள் தமிழ் நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது என்ற முடிவினை எடுக்கும் போது ஈழத் தமிழ் மக்கள் விடயத்தையும் முக்கியமானதொரு விடயமாகக் கவனத்துக்கெடுத்து முடிவுகளை மேற்கொள்ளுமாறு நாம்; வேண்டுகிறோம். தமிழ்நாட்டு மக்கள் என்ற வலுமிக்க சமூகத்தின் பொருண்மிய பலமும் அரசியற் செல்வாக்கும் மேலோங்கிய நிலையில் நிமிர்ந்து நிற்கவும்; அதே பலத்தின்;அடிப்படையில் எமது தேசிய இனப் பிரச்சனை தொடர்பில் நாம் வெறுமனே பார்வையாளர்களாக இல்லாமல் பலம் கொண்ட பங்காளர்களாக மாறும் நிலை ஏற்பட உதவும் வகையிலும் உணர்வோடு செயற்படுங்கள் என்பதே தமிழ்நாட்டு மக்கள்முன் நாம் வைக்கும் வேண்டுதல் ஆகும்.