சீனா சென்றடைந்தார் ரணில்
மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டு நேற்று நண்பகல் கொழும்பில் இருந்து புறப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்றிரவு சீனத் தலைநகர் பீஜிங் சென்றடைந்தார்.
பீஜிங் விமான நிலையத்தில் சீன அதிகாரிகளும், இலங்கை தூதரக அதிகாரிகளும் அவரை வரவேற்றனர். இதையடுத்து, நேற்றிரவு சைனா வேல்ட் வியூ விடுதியில் தங்கிய இலங்கை பிரதமர் இன்று சீனத் தலைவர்கள், அதிகாரிகளுடனான சந்திப்புகளை ஆரம்பிக்கவுள்ளார்.
இதனிடையே இலங்கை பிரதமரின் இந்தப் பயணத்தின் போது முக்கியமாக, கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை தாமதித்ததற்காக, சீன நிறுவனம் கோரும், 125 மில்லியன் டொலர் இழப்பீடு தொடர்பாகப் பேச்சுக்கள் நடத்தப்படும் என்று ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டதால், நாளொன்றுக்கு 380,000 டொலர் இழப்பு ஏற்படும் என்றும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் சீனாவின் தொடர்பாடல் கட்டுமான நிறுவனம் தெரிவித்திருந்தது.
இதன்படி கடந்த ஒரு ஆண்டு காலத்துக்காக 125 மில்லியன் ரூபா இழப்பீடு இலங்கை அரசாங்கம் தர வேண்டும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது இது தொடர்பாக ஏற்கனவே நடத்தப்பட்ட பேச்சுக்கள் தோல்வியில் முடிந்திருந்தன.
இந்தளவு இழப்பீட்டைத் தர முடியாது என்றும், தாம் இதுபற்றி பேச்சு நடத்தவுள்ளதாகவும், பெருநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.