Breaking News

ஐ.எஸ்.ஐ.எஸ் அச்சுறுத்தல் : உன்னிப்பாக அவதானிக்கிறது அரசாங்கம்

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினால் இலங்கைக்கு உள்ள அச்சுறுத்தல் குறித்து அரசாங்கம் தொடர்ந்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அமைச்சர் சாகல தொடர்ந்து தெரிவிக்கையில்-

”இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகள் தலைதூக்குவதைத் தடுப்பதற்காக, தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, முஸ்லிம் தீவிரவாதம் செயற்படுகின்ற வெளிநாடுகளிலிருந்து, இலங்கை திரும்புவோர் மற்றும் உள்நாட்டில் இனங்காணப்பட்டுள்ள கடும்போக்காளர்களின் குடிவரவு குடியகல்வு செயற்பாடுகளை அரசாங்கம் உன்னிப்பாக கண்காணிக்கவுள்ளது.

தீவிரவாதிகள் தொடர்பில் சர்வதேச புலனாய்வு அமைப்புகளுடன் நாம் தொடர்புகளை பேணி வருகின்றோம். உள்நாட்டில் கடும்போக்கான மற்றும் அடிப்படைவாத கருத்துகளை வெளியிடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்தோடு, இவ்வாறான செயற்பாடுகளை தடுக்கும் வகையில், முஸ்லிம் அரசியல்வாதிகள், சமயத் தலைவர்கள், கல்வி அமைச்சு, முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் போன்றவற்றுடன் இணைந்து, கலந்துரையாடல்கள் மற்றும் தெளிவூட்டல் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என்றார்.