Breaking News

ஐம்பது படகுகளில் சாலையை முற்றுகையிட்ட முல்லை மீனவர்கள்!

ஐம்பதிற்கும் மேற்பட்ட படகுகளில் முல்லைத்தீவின் சாலை கரையோரப்பகுதியை முற்றுகையிட்ட முல்லை. மீனவர்கள் வெளிமாவட்டத்தோரின் தடைசெய்யப்பட்ட தொழில் பாவனையையும் உறுதிப்படுத்தினர்.

சட்டவிரோத தொழில்முறைகளால் எமது வாழ்வாதரம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. மீண்டும் உங்களுடைய இடத்திற்கே சென்றுவிடுங்கள் என்று வெளிமாவட்ட மீனவர்களுக்கு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முறைப்பாட்டினை முன்னர் வடமாகாணசபை உறுப்பினர் துரைரசா ரவிகரன் அவர்களுக்கு தெரிவித்த நிலையில் இன்று அவரையும் அழைத்துக்கொண்டே குறித்த சாலைப்பகுதிக்குச்சென்ற மீனவர்கள் தடைசெய்யப்பட்ட தொழில் பாவனையை உறுதிப்படுத்தியுள்ளனர்.

முல்லைத்தீவின் மாத்தளன், இரணைப்பாலை, அம்பலவன்பொக்கணை, ஆனந்தபுரம், வலைஞன்மடம், சுதந்திரபுரம், தேவிபுரம், கல்லாறு உள்ளிட்ட பகுதிகளைச்சேர்ந்த சுமார் ஐந்நூறுக்கு மேற்பட்ட மீனவர்களுடன் முல்லை. சாலைக்குச்சென்ற ரவிகரன் குறித்த முறைப்பாட்டின் உண்மைத்தன்மை உறுதிசெய்தார்.

வெளிமாவட்ட மீனவர்கள் முன்னிலையில் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை சுட்டிக்காட்டிய முல்லை. மாவட்ட மீனவர்கள், "தடைசெய்யப்பட்ட தொழில்களை இங்கு செய்து எமது வயிற்றில் அடிக்காதீர்! உங்களுடைய இடத்திற்குச்செல்லுங்கள்" என்று அழுத்தமாக தெரிவித்துள்ளனர்.

பதற்றம் நிலவிய இச்சூழலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த வடமாகாணசபை உறுப்பினர் வெளிமாவட்ட மீனவர்களுக்கு இடர்சூழ்நிலையை அழுத்தமாக கூறி மீனவர்களுடன் திரும்பினார்.