Breaking News

ரணிலுக்கு செம்கம்பளம் விரிக்கத் தயாராகும் சீனா!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சீனாவுக்கான மூன்று நாள் பயணத்தை ஆரம்பிக்கவுள்ள நிலையில், இந்தப் பயணத்தின் போது குறைந்தபட்சம் 10 இருதரப்பு உடன்பாடுகள் கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, ஹிந்துஸ்தான் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு இலங்கை பிரதமராகப் பதவியேற்ற பின்னர், ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணத்தின் போது,சுதந்திர வர்த்தக உடன்பாடு குறித்து இரண்டு தரப்புகளும் தொடர்ந்து பேசவுள்ளன.

மகிந்த ராஜபக்ச கடந்த ஆண்டு நடத்த அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், இறுக்கமடைந்திருந்த சீன- இலங்கை உறவுகளை, ரணில் விக்கிரமசிங்கவின் இந்தப் பயணம் மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.முன்னதாக,இலங்கை பிரதமரின் இந்தப் பயணம் இரண்டு நாட்களுக்கே திட்டமிடப்பட்டது.

எனினும், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடனான சந்திப்பு வரும் 8ஆம் நாள் நடைபெறுவதைக் கருத்தில் கொண்டே,அவரது பயணம் மூன்று நாட்களாக அதிகரிக்கப்பட்டது.சீனாவின் பாரிய நிறுவனங்கள் பங்கேற்கும் உயர்மட்ட வர்த்தக சம்மேளன மாநாட்டிலும் இலங்கை பிரதமர் கலந்து கொள்ளவுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவுடன் அவரது மனைவியும், ஆறு அமைச்சர்களும் இந்தப் பயணத்தில் பங்கேற்கின்றனர். சின்குவா பல்கலைக்கழக மாணவர்களையும் இலங்கை பிரதமர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

முன்னைய மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், தொடங்கப்பட்ட சீனாவின் சில திட்டங்கள் மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் இடைநிறுத்திய சூழலில், இலங்கையில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் பாதுகாப்பானவை என்ற உத்தரவாதத்தை சீன முதலீட்டாளர்களுக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.