Breaking News

இந்தியா வெளிநாடுகளில் வாழும் புலிப்போராளிகள் மீது நடவடிக்கை!

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தில் பங்கேற்ற சுமார் 4 ஆயிரம் போராளிகள் இறுதி யுத்தத்தின் போதும் அதற்குப் பின்னரும் சரணடையாமல் வடக்கு மாகாணத்திலும், வெளிநாடுகளிலும் வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ள இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கருணாசேன ஹட்டியாராச்சி, இவர்கள் தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா காவல்துறை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.


இவ்வாறு சரணடையாமல் இருக்கும் போராளிகளில் பெரும்பாலானோர் இந்தியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இதர நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும், ஏனையோர் வட மாகாணத்தில் வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.
சரணடையாதிருக்கும் முன்னாள் போராளிகளால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற பீதியை சில தென் பகுதி ஊடகங்கள் கிளப்பி வருகின்றன.

எவ்வாறாயினும் இராணுவத்தினரிடம் சரணடையாதுள்ள முன்னாள் போராளிகளின் செயற்பாடுகள் ஒருபோதும் நாட்டின் பாதுகாப்பிற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் அவர் இதன்போது தெரிவித்தார். மேலும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை பெற்று வடமாகாணத்தில் இருக்கும் முன்னாள் போராளிகள் மற்றும் சரணடையாத நிலையில் அங்கு வசித்துவரும் முன்னாள் போராளிகள் குறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதேபோன்று வெளிநாடுகளில் தஞ்சம் பெற்று வாழ்ந்துவரும் சரணடையாத முன்னாள் போராளிகள் அங்கு தொழில்களில் ஈடு பட்டுவருகின்றனர். அவர்கள் மூலமாக இலங்கையின் பாதுகாப்புக்கு எவ்விதத்திலும் அச்சுறுத்தல் ஏற்படாது என்பதை உறுதியுடன் கூறுகின்றேன். அவர்களை மீள நாட்டுக்கு வரவழைத்து பதிவு செய்வது சாத்தியமாகாது. எவ்வாறாயினும் உள்நாட்டில் இருக்கும் சரணடையாத முன்னாள் போராளிகள் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை காவல்துறையினர் முன்னெடுப்பார்கள் எனவும் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.