தமது அரசியலுக்காய் தமிழர்மீது போரை திணிக்க முயற்சி!
ஈழத் தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் ஒடுக்கி அடக்கும் அபாய வலயங்களையே சிங்களப் பேரினவாதிகள் பின்னுகின்றனர். இதனைத்தான் அண்மையில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கிகள், வெடிபொருட்கள் தொடர்பான விடயங்கள் உணர்த்துகின்றன. வடகிழக்குத் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான ஒரு நிலையை தெற்கில் காண்பித்து அதன் ஊடாக அரசியல் ஆதாயங்களை பெற பேரினவாத சக்திகள் முயல்வது புதிய அணுகுமுறையல்ல.
இராணுவமுகாங்களை அகற்றவும், சோதனைச்சாவடிகளை அகற்றவும் தடைவிதிக்கக்கோரும் பேரினவாத சக்திகள், எதிர்பார்த்ததைப்போலவே மன்னார் தள்ளாடியில் சோதனைச்சாவாடி ஒன்றும் திறக்கப்பட்டிருக்கிறது. இவை எதற்கான? யாருக்கான சோதனைச்சாவடி? தமிழ் மக்கள் ஆயுதம் எடுத்து வருவதை தடுத்தற்கான சோதனைச்சாவடிகள் அல்ல. தமிழ் மக்களின் கைகளில் ஆயுதங்களை திணிக்க கொண்டு வருவதை தடுப்பதற்கான சோதனைச்சாவடி. தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் சோதனைச்சாவடிகளுக்குள் வாழ வேண்டும் என்பதே இந்தச் செயல்களைச் செய்தவர்களின் நோக்கம்.
கடந்த காலத்தில் தமிழ் மக்கள் தமது உரிமையை வலியுறுத்தி, விடுதலையை வலியுறுத்தி, தமது தேசத்தை வலியுறுத்தி ஆயுதம் ஏந்திப் போரிட்டனர். தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாக சித்திரித்து அவர்களை உலக வல்லாதிக்கங்களின் ஆயுதம் கொண்டு இலங்கை அரசு அடக்கியது. விடுதலைப் போரில் ஈடுபட்டவர்கள், ஆயுதங்கள் தம்மீது திணிக்கப்பட்டதாகவே தெரிவித்தனர்.
ஆயுதங்கள் இல்லாத, குண்டுகள் இல்லாத, துப்பாக்கிகள் இல்லாத ஒரு வாழ்வுக்காக அவர்கள் போராடினார்கள். ஆனால் தடைசெய்யப்பட்ட குண்டுகளையும், நஞ்சு குண்டுக்களையும் கொண்டு அந்த ஆயுதங்கள் செயலழிக்கச் செய்யப்பட்டன. தமிழர்களின் போராட்டத்தை ஒடுக்குவதில் ஆயுதங்களுக்கு ஈடாக சோதனைச்சாவடி நிலையங்களும் கொடிய ஆயுதங்களாக உபயோகிக்கப்பட்டன.
நாங்கள் ஒரு சோதனைச்சாவடி நிலையத்தை கடப்பது என்பது ஒரு நரகத்தை கடப்பதைப்போல ஒரு யுகத்தை சந்தித்தோம். தமிழர்களின் பகுதிகளை சோதனைச்சாவடிகள் துண்டித்தன. மூடுண்ட பகுதிகளாக்கின. தமிழர் நிலமெங்கும், முழத்திற்கு முழம் சோதனைச்சாவடிகள் போட்டப்பட்டு, தமிழர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள். இலங்கை தீவு முழுவதும் துன்பப்பட்டார்கள். போராட்டமும் வேண்டாம் விடுதலையும் வேண்டாம், நாடும் வேண்டாம் என்று சொல்லும் விரக்தியை ஏற்படுத்தும் திட்டத்தை அவை கொண்டிருந்தன
சோதனைச்சாவடிகள் தமிழர்கள் காணாமல் போகும் அபாய வலயங்கள் ஆகின. வாழ்வு முடியும் இடமானது. பாதுகாப்பு சோதனைச்சாவடிகள் எனப்பட்டவைகளை கடந்து பலர் திரும்பவேயில்லை. சோதனைச் சாவடிகளிலேயே சிலர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். நோய்வாய்ப்பட்டவரை, கடக்கவிடாத உயிர் குடிக்கும் மிருகச்சாலைகளாகின. உணவுகளை தடைசெய்யும் கொடுஞ் செயல்களை செய்தன. உறவுகளை பிரித்து வேடிக்கை பார்த்தன. ஆக, சோதனைச்சாவடிகள் போரின் இன்னொரு ஆயுதங்களாக கையாளப்பட்டன.
தமிழர்களின் நிலமே சோதனைச்சாவடிகளால் ஆக்கிரமிக்கப்பட்டடிருந்தது. அதனால் அடையாளம் செய்யப்பட்டது. தமிழர்கள் சோதனைச்சாவடிகளினால் துன்புறுத்தப்பட்டார்கள். அந்தக் கொடிய சோதனைச்சாவடிகளின் யுகம் இன்னும் முடியவில்லை. இன்னும் வலிவடக்கிலும் மூடப்படவில்லை. சுமார் 10 வருடங்களாக பெரும் பாதிப்புக்களை உருவாக்கிய ஓமந்தை சோதனைச்சாவடி கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் மூடப்பட்டது.
கடந்த காலத்தில் சோதனைச்சாவடிகளை தமிழ் மக்களை அடக்கி ஆளும் கருவியாக பயன்படுத்திய மகிந்த ராஜபக்ச போருக்குப் பிந்தைய காலத்தில் அரசியல் செய்யும் முதலீடாகவும் பயன்படுத்தினார். வாக்குகளுக்காக சோதனைச்சாவடிகளை திறந்தார். இனப்படுகொலைப் போர்க்குற்றங்களிலிருந்து தப்ப சோதனைச்சாவடிகளை திறந்து உலகிற்கு படம் காட்டினார். ஒரு சோதனைச்சாவடியை திறப்பதையே பெரும் அரசியல் விழாவாக்கினார்.
அன்று, தமது உரிமைக்காக தமிழர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். இப்போது, சிங்கள மேலாதிக்கவாதிகள் தமிழர்களை ஒடுக்கவும் அவர்களின் உரிமையை மறுக்கவும் தமது அரசியல் நலன்களுக்காகவும் தமிழர்களின் கையில் ஆயுதங்களை திணிக்க முயல்கின்றனர். நிலத்திற்காக போராடும் குழந்தையின் கையில் ஆயுதங்களை சொருகுகின்றனர். காணாமல் போகச்செய்யப்பட்ட பிள்ளைக்காய் கண்ணீர் சிந்தும் தாய்மீது தற்கொலை அங்கிகளை அணிவிக்கின்றனர். சிறையில் அடைக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி ஒருவனின் பிள்ளை, அப்பா எங்கே என்று அழும் குழந்தைமீது புலித் தொப்பியை அணிவிக்கின்றனர்.
சிங்களப் பேரினவாதிகள் மீண்டும் தமிழர்களை சோதனைச்சாவடிகளுக்குள் வைத்திருக்க விரும்புகின்றனர். தமிழர்களின் கையில் ஆயுதம் இருந்தால்தான் தாம் அரசியலில் இலாபம் ஈட்டலாம் என்று அவர்கள் கருதுகின்றனர். ஆட்சியை கைப்பற்றவும் அரசுகளை கவிழ்க்கவும் தமிழர்களின் கையில் ஆயுதத்தை திணிக்கின்றனர். தமிழ் மக்களுக்கு சிறு துரும்பையும் கொடுக்ககூடாது என்ற பேரினவாத நோக்கும் இந்தச் செயல்களின் அடிப்படையாகும்
தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டத்தை கைவிடுவதாக முள்ளிவாய்க்காலில் தெரிவிக்கப்பட்ட பின்னர் இதுவரை காலமும் ஏன் ஆயுதம் ஏந்த நேரிட்டது? தமிழ் மக்களுக்கு இதுவரை காலமும் நடந்தது என்ன? என்பதை ஜனநாயக வழியில் உலகமெங்கும் வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களை ஒரு ஜனநாயக ஆயுதமாக உபயோகித்து தமிழர்கள் தமது உணர்வையும் குரலையும் வெளிப்படுத்தினர்.
தமிழர் தாயகம் எதை விரும்புகிறது என்பதை ஜனநாயக வழியில், தங்கள் வாக்குகளின் ஊடாக தமிழர்கள் வெளிப்படுத்த, சிங்களப் பேரினவாதிகளோ, தமிழர்களின் கையில் ஆயுதங்களை கொடுக்கின்றனர். தமக்கு நிகழ்ந்த இனக்கொலை அநீதிக்காக ஆட்சியை மாற்ற ஜனநாயக ரீதியான போராட்டம் ஒன்றை எமது மக்கள் மேற்கொள்ள சிங்களப் பேரினவாதிகளோ, தமிழர்களுக்கு தற்கொலை அங்கி அணிவிக்கின்றனர்.
வடக்கில் எத்தனையோ தடவைகள் கடந்த காலத்தில் கைவிடப்பட்ட ஆயுதங்கள், வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இம்முறை ஆயுதங்கள் மீட்கப்பட்டதும் மகிந்த ராஜபக்ச தரப்பினர் மீண்டும் புலிகள் என்று பீதியை ஏற்படுத்தினார்கள். தமிழர் உரிமைக்காக போராடிய புலிகளை பயங்கரவாதிகளாக சித்திரிப்பதும் அவர்கள் மீண்டும் வருகிறார்கள் என்று கூறுவதன் ஊடாகவும் ராஜபக்ச தன்னுடைய அரசியல் முதலீடாக தமிழர்மீதான ஒடுக்குதலையையே கொண்டிருக்கிறார். அதுவே அதிகாரத்தை கைப்பற்ற உதவும் என நம்புகிறார்.
ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற தென்னிலங்கை பேரினவாத சக்திகளுக்கு போர் தேவைப்படுகிறது. தமிழர்கள்மீது போரை திணித்து அரசியல் செய்ய முனையும் தாம், கடந்த காலத்தில் எப்படியொரு போரை செய்திருப்போம் என்பதையும் கடந்த காலத்தில் தாம் நிகழ்த்திய பேரினவாதச் செயல்கள்தான் ஈழத் தமிழ் மக்களை ஆயுதம் ஏந்தச் செய்தன என்பதையும் சிங்களப் பேரினவாத சக்திகளால் இதைவிட வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள இயலாது. யார் போர் வெறியர்கள் என்பதையும் யார் போர் பிரியர்கள் என்பதையும் காலம் உணர்த்துகிறது.