இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் இலங்கை வருகை இடைநிறுத்தப்பட்டுள்ளது
கொழும்பில் வரும் ஏப்ரல் 23 அன்று இசை நிகழ்ச்சி நடத்த ஏ.ஆர். ரஹ்மான் திட்டமிருந்தார். இந்நிலையில் தேர்தல் காரணமாக இசை நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
14 இசைக்கலைஞர்களுடன் கொழும்பில் இசை நிகழ்ச்சி நடத்த ரஹ்மான் திட்டமிட்ட நிலையில் தமிழ் அமைப்புகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. ரஹ்மானின் வீட்டுக்கு அருகே, ‘உலகத் தமிழினம் போற்றும் இசைமேதையே, 2 லட்சம் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த ரத்தக் கறைபடிந்த சிங்கள அரசோடு கைகோர்ப்பது நியாயமா?’ என்கிற கேள்வியுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இதனையடுத்து, இசை நிகழ்ச்சியைத் தள்ளி வைத்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.
இதுகுறித்து அவர் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்தியத் தேர்தல் காரணமாக ஏப்ரல் 23 அன்று நடப்பதாக இருந்த இசை நிகழ்ச்சி, தள்ளி வைக்கும்படியான நிலைமை ஏற்பட்டுள்ளது. 14 இசைக்கலைஞர்கள் கலந்துகொள்ளும் இசை நிகழ்ச்சிக்காகத் திட்டமிருந்தோம். அது நிச்சயம் நடைபெறும். இந்த முடிவுக்காக யாரும் வருத்தப்படவேண்டாம். இசைக்கலைஞர்களிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்ட பிறகு இசை நிகழ்ச்சி நிச்சயம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.