Breaking News

வடக்கு கிழக்கில் தனி நாடாளுமன்றம்!- வடமாகாண சபை பாிந்துரை

வட,கிழக்கு மாகாணங்களை இணைத்து தனி நாடாளுமன்றம் அமைக்கப்பட்டு சமஷ்டி முறையிலான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என வடமாகாண சபையினால் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரைத்துள்ளது.

வடமாகாண சபையின் அமர்வு கைதடியிலுள்ள மாகாண சபை கட்டிடத் தொகுதியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போது வடமாகாண சபையினால் நியமிக்கப்பட்ட 19 பேர் கொண்ட குழு பாிந்துரைத்த திட்ட வரைபை முதலமைச்சா் விக்னேஸ்வரரன் சபையில் சமா்ப்பித்து வாசித்தாா்.

திட்டவரைபில் முன்மொழியப்பட்டுள்ள முக்கிய பரிந்துரைகள் வருமாறு,

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் வடக்கு மற்றும் கிழக்கில் ஓர் அலகாகவும், தமிழ் பேசும் மலையக மக்கள் வேறு அலகாகவும் இனங்காணப்பட்டு, அங்கீகரிக்கப்பட வேண்டும்.

மாநில அரசாங்கத்திற்கு முழுமையான பொலிஸ் அதிகாரம் வழங்கப்படல் வேண்டும் என்பதோடு அரச அதிகாரமானது மக்கள் அதிகாரமாக பன்முகப்படுத்தப்பட வேண்டும்.

அரசியலமைப்பில் சிங்கள மொழியைப் போன்று தமிழ் மொழிக்கும் சம அந்தஸ்த்து வழங்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு மாநில அரசாங்கத்தினதும் தன்னாட்சி பிராந்திய அரசாங்கத்தினதும், சுயாட்சியானது கூட்டாட்சி சமஷ்டி அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்படுவது அவசியம்.

வட,கிழக்கு மாநில நாடாளுமன்றம், வட,கிழக்கு முஸ்லிம் பிராந்திய சபை அதேபோல் மலையகத் தமிழ் பிராந்திய சபை ஆகியவற்றிற்கு தமது சொந்த அலுவல்களை மேற்கொள்வதற்கான முழுமையான அதிகாரங்கள் ஒப்படைக்க வேண்டும். இந்த நாடாளுமன்றத்திற்கும் பிராந்திய சபைகளுக்கும் போதிய சுயாட்சியானது ஏற்பாடு செய்யப்படல் வேண்டும்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கப்பட்டு, நாட்டின் பொதுவான குடியியல் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும்.

மாநில எல்லைக்குட்பட்ட அரச காணிகள் மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கும் எல்லைக் கட்டுப்பாட்டிற்கும் கொண்டுவரப்படுதல் வேண்டும். அந்த காணிகள் அப்பிரிவிலுள்ள மக்களின் நன்மைக்காக பயன்படுத்தும்போது சமஷ்டி கூட்டரசாங்கமானது மாநில அரசாங்கத்தின் அல்லது பிராந்திய அரசாங்கத்தின் சம்மதம் அல்லது இசைவு இன்றி அந்த காணிகள் மீது எந்த அதிகாரத்தையும் பிரயோகிக்கக்கூடாது

முன்னாள் போராளிகளை பொது வாழ்க்கையினுள் மீள்கொண்டுவருவதன் பொருட்டு வடமாகாணத்தில் படைக்குறைப்பு, படைக்கலைப்பு மற்றும் மீள் ஒருங்கமைத்தல் செயன்முறையானது மேற்கொள்ளப்படல் வேண்டும் – என்று முன்மொழிவில் பாிந்துரைக்கப்பட்டுள்ளது.