தற்கொலை அங்கி தொடர்பாக ரணில் இன்று விசேட உரை!
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நோக்கில் பாராளுமன்றம் மாற்றப்பட்டுள்ள நிலையில் அரசியல் அமைப்புப் பேரவையின் முதலாவது அமர்வு இன்று இடம்பெறுகிறது.
பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு கூடவுள்ள நிலையில் 2.00 மணிக்குப் பின்னர் அரசியலமைப்பு சபைக்கான அமர்வு நடைபெறும் என பாராளுமன்றம் பிரதிச் செயலாளர் நாயகம் நீல் தித்தவல தெரிவித்தார்.
அதேவேளை இன்றைய சபை அமர்வில் ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தாயகத்தின் யாழ்ப்பாணத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் தொடர்பாக விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாகவும் தெரியவருகிறது.
இன்றைய பாராளுமன்ற அமர்வு தொடர்பில் பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நீல் தித்தவல மேலும் தெரிவிக்கையில்,
செவ்வாய்க்கிழமை 1.00 மணிக்கு ஆரம்பமாகும் பாராளுமன்ற சபை அமர்வுகள் எதிர்வரும் வியாழக்கிழமை வரை மூன்று தினங்களே நடைபெறவுள்ளன. வெள்ளிக்கிழமை பாராளுமன்ற அமர்வு இடம்பெறமாட்டாது.
நண்பகல் 1.00 மணிக்கு ஆரம்பமாகும் பாராளுமன்ற அமர்வு 2.00 மணிவரை வாய்மூல கேள்விகளுக்கான பதிலளிக்கும் மற்றும் சபையில் ஏனைய விடயங்கள் நடைபெறும். அதன் பின்னர் அரசியலமைப்பு பேரவையின் முதலாவது அமர்வு நடைபெறும் என்றார்.
புதிய அரசியலமைப்பை நோக்கில் பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை அண்மையில் நிறைவேற்றப்பட்டதற்கு அமைவாகவே இன்று செவ்வாய் கிழமை பிற்பகல் 2 மணிக்கு அரசியலமைப்பு சபையின் கன்னி அமர்வு இடம்பெறவுள்ளது.
2017 ஆம் ஆண்டு இறுதிக்குள் அரசியலமைப்பு மறுசீரமைப்பை உருவாக்கி அதனை சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக நிறைவேற்றிக் கொள்ளவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இந்நிலையில் தேசிய பிரச்சனைக்கு தீர்வை எட்டகூடிய பொறிமுறையொன்றை முன் வைத்தல் , தற்போது காணப்படும் விருப்பு வாக்கு முறைமையை அடிப்படையாக தேர்தல் முறைமையை மாற்றியமைத்தல் என்பனவற்றை அடிப்படையாக கொண்டே அரசியலமைப்பு மறுசீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றத்தில் கூடவுள்ள அரசியலமைப்பு சபைக்கு 7 உப தலைவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். சபாநாயகர் அற்ற நிலையில் அரசியலமைப்பு சபை கூடி விடயங்களை ஆராயுமாயின் அதற்கு தலைவராக , இன்று தெரிவு செய்யப்படும 7 பேரில் ஒருவர் தலைமைத்துவத்தை ஏற்று செயற்படுவர்.
அத்துடன் இன்றைய கன்னியமர்வில் உத்தேச புதிய அரசியலமைப்பு வரைபை தயாரிக்கும் பணிகளுக்கு வழிக்காட்ட விஷேட குழு ஒன்றும் ஸ்தாபிக்கப்பட்டு அந்த குழவிற்கு பொறுப்புகள் கையளிக்கப்பட உள்ளன. இந்த விஷேட குழுவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க , எதிர் கட்சி தலைவர் இரா.சம்பந்தன் , சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ உட்பட 17 உள்ளடங்குகின்றனர்.
புதிய அரசியலமைப்பிற்கான இந்த வழிக்காட்டல் குழுவிற்கு பிரதமர் ரணில் விக்ரசிங்க தலைமை தாங்குவார். குழுவின் தேவைக்கேற்ப உப குழுக்களை ஸ்தாபித்து செயற்பட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் உப குழுவின் ஆகக் கூடிய உறுப்பினர்கள் எண்ணிக்கையாக 11 பேர் காணப்படுவர்.