Breaking News

இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு பிரித்தானியா உதவி?

இலங்கையில் மனித உரிமைகள் மேம்பட வேண்டும் என்றும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் சர்தேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் கோரும் பிரித்தானியா, போர்க்காலத்தில் போர்க்குற்றங்களுக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


இரகசிய ஆவணங்கள் மூலம் இவை தெரியவந்துள்ளதாக வைஸ்.கொம் தெரிவித்துள்ளது.

www.vice.com.uk என்ற இணையத்தளம் இந்தக்குற்றச்சாட்டை, Secret Documents Reveal How Britain Funded Possible War Crimes in Sri Lanka என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் டேவிட் மிலிபேன்ட்டின் தகவல்படி பிரித்தானியாவின் உதவிகள் இலங்கை அரசாங்கத்தின் போர்க்குற்றங்களுக்கு உதவுவதாக அமைந்தன என்று வைஸ்.கொம் தெரிவித்துள்ளது

2008ஆம் 2009ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் இலங்கையின் பொலிஸ் படைக்கு பிரித்தானியா பொலிஸ் உதவிகளை வழங்கியது.

இலங்கையில் போர்க்காலத்தில் அமைக்கப்பட்ட சமூக பொலிஸ் படை தமிழ் மக்கள் மத்தியில் சிங்கள சமூகத்தில் புலனாய்வாளர்களை ஈடுபடுத்தும் ஒரு நடவடிக்கையாகவே கருதப்பட்டது என்று இலங்கையில் இருந்து வெளியேறி வெளிநாட்டில் வசிக்கும் ஊடகவியலாளர் பாஷன அபேவர்த்தன குற்றம் சுமத்தியுள்ளார்.

இதனடிப்படையிலேயே சித்திரவதைகளும் அதிகரித்திருந்தன.

2008ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் கடத்தல்களும் காணாமல் போதல்களும் அதிகரித்த நிலையில் அதனை முன்னெடுத்த பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்திருந்தது.

இலங்கையின் அன்றைய போர்க்குற்ற அரசாங்கத்துக்கு ஏன் பிரித்தானியா உதவியளித்தது என்பது தெரியவில்லை.

எனினும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் லியாம் பொக்ஸ் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அதற்கான காரணத்தை விளக்கினார்.

இந்து சமுத்திரத்தின் முக்கிய இடத்தில் அமைந்திருப்பதாலும், சர்வதேச ஸ்திரதன்மையை பேணவும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியுள்ளதாக பொக்ஸ் குறிப்பிட்டார்.

ஸ்கொட்லாந்தின் பொலிஸார் இலங்கைக்கு விஜயம் செய்து இலங்கையின் பொலிஸ் அதிகாரிகளுக்கு பயிற்சிகளை வழங்கினார்கள்,

2009ஆம் ஆண்டில் பிரித்தானியாவின் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு ஆலோசர் பீட்டர் வில்சன் இலங்கைக்கு இரகசியமாக விஜயம் செய்தார்.

அவர் இலங்கையில் பாதுகாப்பு அமைச்சின் திட்டத்துறை தலைவராக இருந்த சஞ்சய கொலன்னேயை சந்தித்தார்.

இதனையடுத்து போர் முடிந்தபின்னர் கொலன்னேயும் அவரது மனைவியும் லண்டனுக்கு சென்று பிரித்தானிய வரியிறுப்பாளர்களின் செலவில் இராப்போசனம் உண்டதாக வைஸ். கொம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு போர் நடவடிக்கைகளுக்கு உதவிய பிரித்தானியா தற்போதும் இலங்கையில் மனித உரிமைகளில் முன்னேற்றம் காணப்படவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

அதேநேரம் மனித உரிமைகளை பொலிஸார் மத்தியில் முன்னேற்ற தொடர்ந்தும் பிரித்தானியா உதவிவருகிறது.

அத்துடன் இலங்கையில் நல்லிணக்கத்தையும் மனித உரிமைகளையும் முன்னேற்ற தமது நாடு 6.6 மில்லியன் பவுன்ஸ்களை வழங்கவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் அண்மையில் அறிவித்தல் விடுத்திருந்தமையையும் வைஸ்.கொம் சுட்டிக்காட்டியுள்ளது.