காணாமற்போனோர் தொடர்பான சாட்சி விசாரணைகள் வட மாகாணத்தில் நிறைவு
வட மாகாணத்திற்கான தமது சாட்சி விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த 26 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதிவரை வட மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் சாட்சி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ. குணதாச குறிப்பிட்டார்.
முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் நடத்தப்பட்ட ஆணைக்குழுவின் அமர்வுகளில் 1053 பேரின் சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டன.
அதேபோன்று ஆறு நாட்களாக இடம்பெற்ற ஆணைக்குழு அமர்வுகளில் மூன்று மாவட்டங்களில் இருந்தும் 306 புதிய முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இதுதவிர யாழ். மாவட்டத்திலும், கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்திலும் சாட்சி விசாரணைகள் ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
வட மாகாணத்தின் கிளிநொச்சி மற்றும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மாத்திரம் காணாமற்போனோர் தொடர்பான முறைபாடுகள் தொடர்பில் சாட்சியங்கள் பதிவு செய்யப்படவேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அடுத்தகட்ட சாட்சி விசாரணைகளை கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை ஆணைக்குழு மேற்கொண்டு வருகின்றது.
கிழக்கு மாகாணத்திலும் எஞ்சியுள்ள இரண்டு மாவட்டங்களில் விரைவில் இறுதிக்கட்ட சாட்சி விசாரணை அமர்வுகள் நடத்தப்பட்டு, அறிக்கையை தயாரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் மேலும் கூறினார்.