வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டாம்!
வடக்கில் நடக்கும் மோசமான சம்பவங்கள் தொடர்பில் சாதாரண கண்ணோட்டத்தில் பார்க்காது தீவிரமாக ஆராய்ந்து வடக்கின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். வடக்கில் எப்போதுமே பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது. அவ்வாறான நிலையில் வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றுவது நல்ல விடயம் இல்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
சிங்கள மக்கள் மத்தியில் முரண்பாடுகள் இருக்கும் நிலையில் வடக்கில் தமிழ் மக்கள் மத்தியில் இந்த அரசாங்கம்நல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கில் வீடொன்றில் இருந்து ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ள நிலையில் தேசிய பாதுகாப்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என பாதுகாப்பு தரப்பும் தெரிவித்துள்ளது. இந்த நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
இன்று அரசாங்கம் இரண்டு வேறுபட்ட கொள்கைகளின் அடிப்படையில் செயற்படுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சி ஒரு கொள்கையிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேறு கொள்கையிலும் இருந்துகொண்டு நாட்டை ஆட்சி செய்கின்றது. அவ்வாறு இருக்கையில் இருவரும் ஒன்றிணைந்து ஆட்சியை முன்னெடுத்து செல்வது கடினமானது.
அதனால் தான் இன்று நாட்டில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இன்று இவர்கள் செய்யும் தவறுகளில் இருந்து வெளிவர முடியாது. இந்த ஒரு ஆண்டு காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பல தவறுகளை செய்துள்ளன. ஆனால் இப்போது வரையிலும் பழி என்மீதே சுமத்தப்படுகின்றது. அவர்கள் செய்யும் அனைத்து தவறுகளில் இருந்தும் தப்பித்துக்கொள்ள என்னை பலிக்கடாவாக மாற்றியுள்ளனர்.
யாரும் இன்று கட்சியையோ அல்லது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையோ ஆதரித்து நல்லாட்சி அரசாங்கத்தில் கைகோர்க்கவில்லை. அதிகாரத்தையும் பதவியையும் விரும்பியே இவர்கள் அரசாங்கத்தில் கைகோர்த்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 7ஆம் திகதி கட்சி தாவியவர்களை வைத்து இன்று என்னை தாக்குகின்றனர். நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும், தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என இவர்கள் கூறுகின்றனர். ஆனால் கட்சியில் இருந்து பிரிந்து சென்றுள்ள எம்முடன் மீண்டும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இவர்கள் தயாராக இல்லை. சிங்கள மக்கள் கஷ்டத்தில் உள்ளனர். ஒதுக்கப்படுகின்றனர். அதை விடுத்து வடக்கில் சென்று நல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்றனர்.
இன்று நாட்டில் வெடிபொருட்கள் கண்டெடுக்கப் படுகின்றன. ஆயுத பாவனை மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. புலனாய்வு செயற்பாடுகள் முழுமையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலைமை தொடர்ந்துசென்றால் நாடு மிகவும் மோசமான விளைவுகளை சந்திக்கவேண்டிய நிலைமை ஏற்படும். ஆனால் இது அரசாங்கத்திற்கு விளங்கவில்லை. யுத்த சூழல் நிலவினாலும் இல்லாவிட்டாலும் நாட்டில் தேசிய பாதுகாப்பை பலபடுத்த வேண்டிய தேவை உள்ளது. எந்த அரசாங்கமாக இருந்தாலும் நாட்டின் தேசிய பாதுகாப்பில் அதிக அக்கறை காட்டவேண்டிய தேவை உள்ளது.
இந்த அரசாங்கமும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அதிக அக்கறையுடன் செயற்பட வேண்டும் என நினைகின்றேன். வடக்கில் நடக்கும் மோசமான சம்பவங்கள் தொடர்பில் சாதாரண கண்ணோட்டத்தில் பார்க்காது தீவிரமாக ஆராய்ந்து பாதுகாப்பில் அதிக அக்கறை காட்டவேண்டும். ஆரம்பத்தில் இருந்தே இந்த விடயங்கள் தொடர்பில் நாம் எச்சரித்து வந்தோம். வடக்கில் இருந்து இராணுவம் வெளியேற்றப்பட்ட போதும், புலனாய்வு பிரிவை கட்டுப்படுத்திய போதும் நாம் எச்சரிக்கை விடுத்தோம். வடக்கில் எப்போதுமே பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது என நாம் கூறினோம்.
இந்த விடயம் தொடர்பில் நான் பிரதமருடன் அழைப்பை ஏற்படுத்தி வினவினேன். வடக்கில் ஆயுதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது இதன் உண்மை தன்மைகள் என்ன, ஆயுதம் கண்டெடுக்கப்பட்டமை உண்மையா என வினவினேன். இது தொடர்பில் ஆராய்ந்து மீண்டும் என்னுடன் கதைப்பதாக பிரதமர் கூறினார். நாம் அதிகாரத்தில் இல்லாவிட்டாலும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் எமக்கு அக்கறை உள்ளது. நாட்டு மக்களை குழப்பாது இந்த விடயங்களை கையாள்வது அவசியம். அதேபோல் தேசிய பாதுகாப்பு தொடர்பில் மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. தேசிய பாதுகாப்பு தொடர்பில் மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும்.
மேலும் நாட்டின் அபிவிருத்திகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. எமது ஆட்சியில் மேற்கொண்ட அபிவிருத்திகள் அனைத்தும் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளன. இன்று மக்களுக்கு எந்தவொரு அபிவிருத்தி நன்மைகளும் கிடைக்கவில்லை. மாறாக இந்த நாட்டில் பிரிவினைவாதமும் சர்வதேச ஆக்கிரமிப்பும் மட்டுமே நிலவி வருகின்றன என குறிப்பிட்டார்.