Breaking News

துறைமுக நகர திட்டத்தை விரைவுபடுத்த இலங்கை இணக்கம்

முடங்கியுள்ள கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் சீனாவும்,இலங்கையும் உறுதியுடன் இருப்பதாக, சீனாவின் மூத்த இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பீஜிங்கில் நேற்று சீன – இலங்கை பிரதமர்களுக்கு இடையில் நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து, சீன வெளிவிவகார அமைச்சின் ஆசிய விவகாரங்களுக்கான திணைக்களத்தின் தலைவர் சியாவோ கியான், ஊடகங்களைச் சந்தித்தார்.அப்போது கருத்து வெளியிட்ட அவர், இந்தத் திட்டப் பணிகளை விரைவாகவும், விரிவாகவும் முன்னெடுப்பதற்கு இரு தலைவர்களும் இணங்கியுள்ளனர்.

திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பாக, இலங்கை தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், நாங்கள் மேலதிக தொழில்நுட்ப விவகாரங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.இது முக்கியமான ஒரு திட்டம். இந்த திட்டத்தை வலுவாக முன்கொண்டு செல்வதில் இரு நாடுகளும் பலமான விருப்பை கொண்டுள்ளன.

கூடிய விரைவில் இந்தப் பணிகள் தொடங்கப்படும் என்று சீனாவின் தரப்பில் நாங்கள் நம்புகிறோம். நீண்டகாலம் காத்திருக்க வேண்டியதில்லை என்று நம்புகிறோம்.” என்று தெரிவித்தார்.எனினும், இழப்பீட்டு விவகாரம் தொடர்பாக அவர் எதையும் தெரிவிக்கவில்லை.

சீன நிறுவனங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாக இலங்கை உத்தரவாதம் அளித்திருப்பதாகவே அவர் குறிப்பிட்டிருந்தார்.அம்பாந்தோட்டையில் சிறப்பு பொருளாதார வலயத்தை அமைப்பது குறித்தும் பேச்சுக்கள் நடத்தப்பட்டிருந்தன. இந்த திட்டத்துக்கு சீனா முன்னுரிமை கொடுக்கும் என்றும், சுதந்திர வர்த்தக உடன்பாடு பற்றிய பேச்சுக்கள் விரைவுபடுத்தப்படும் என்றும், சியாவோ கியான் குறிப்பிட்டார்.