சுவாமிநாதனுக்கு சுமந்திரன் கடிதம்!(கடிதம் இணைப்பு)
வடக்கு,கிழக்கு மாகாணங்களில் நிர்மாணிக்கப்படவுள்ள 65 ஆயிரம் வீடமைப்புத் திட்டம் தொடர்பான உண்மை நிலவரங்களை வெளிப்படுத்துமாறு வலியுறுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
இந்தக் கடிதத்தை அவர் நேற்று வியாழக்கிழமை அனுப்பிவைத்துள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் பயன்பெறக்கூடிய வகையில் அமைக்கப்படுகின்றதா என்பது தொடர்பாகவும், வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுக்கின்ற நிறுவனம் தொடர்பாகவும் பல்வேறு கேள்விகளை சுமந்திரன் எழுப்பியுள்ளார்.
பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்ட முறைமை குறித்தும், உள்ளூர் ஒப்பந்தக்காரர்களிடம் வீடமைப்பிற்கான செலவுத் தொகை பற்றிய மதிப்பீடுகள் பெறப்படதா என்பது குறித்தும் அல்லது உள்ளூர் ஒப்பந்தக்காரர்களுடன் அதுதொடர்பாக ஆலோசிக்கப்பட்டதா என்பது தொடர்பிலும் விளக்கமளிக்க வேண்டும் என்று சுமந்திரன் அந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளை குறித்த நிறுவனத்திற்கு இந்த வீடமைப்புத் திட்டத்தை வழங்குவதற்கான கேள்விமனு எவ்வாறு கோரப்பட்டது என்றும் அந்த நிறுவனத்திடமே இந்தப் பொறுப்பை கையளிப்பது தொடர்பாக எவ்வாறு முடிவெடுக்கப்பட்டது என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட வேண்டுமென்றும் சுமந்திரன் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
சில சர்வதேச பொது அமைப்புக்களின் உதவியுடன் வடக்கு, கிழக்கில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுவரும் வீடமைப்பு தொடர்பாகவும் அந்தக் கடிதத்தில் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தக் கடிதத்தில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கான தகவல்களை இந்த மாதம் 21ஆம் திகதிக்கு முன்னதான வழங்குமாறும் சுமந்திரன் கடிதத்தில் கோரியுள்ளார்.