Breaking News

நியாயத்தை முடக்கும் அந்த கூர்வாளின் நிழல்!

ஒரு கூர்வாளின் நிழலில் புத்தக ஆசிரியரான புலிகளின் மகளிரணித் தலைவி தமிழினி, புத்தகம் சொல்லும் செய்தி மற்றும் கருத்துக்களை தன் வரலாறு என்று தலைப்பிட்டிருந்தாலும், அவர் போராளியாக இருந்த 18 ஆண்டு கால இயக்கத்தின் வரலாற்றையே அதிகம் பேசிச் சென்றிருக்கிறார்.

புத்தகத்தின் பின் அட்டையின் தமிழினி சொல்வதாக இப்படி வந்திருக்கிறது: இயக்கத்தின் தவறுகள் ஒரு போராட்டத்தின் நியாயத்தை முடக்கிவிட முடியாது ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தின் நியாயத்தை முடக்கின்ற வகையிலேயே, புத்தகம் முழுக்க தமிழினியின் வாழ்க்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 18 ஆண்டுகள் இருந்தவர், என்ன காரணத்திற்காகவோ அந்த இயக்கத்தின் குறைகளை தேடித் தேடி சுட்டிக் காட்ட முயல்கிறார். இந்த முயற்சியில் சில இடங்களில் வெற்றியும் பல இடங்களில் தோல்வியும் அடைந்திருக்கிறார். புத்தகம் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்க தமிழினி உயிருடன் இல்லை.

30 ஆண்டு காலமாக போராடிய ஓர் இயக்கத்தின் மீதான அவரது விமர்சனத்தை வாசித்துவிட்டு, அமைதி காக்கவும் முடியாது. புத்தகத்தில் முரண்பாடான பல கருத்துகள் முன்னின்று தொந்தரவு செய்கின்றன. அந்த முரண்பாடுகளை முடிந்தவரை வரிசைப்படுத்துவது, புலிகளின் போராட்டத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்த என்னைப் போன்றவர்களின் கடமை.

புத்தகம் முழுக்க பல இடங்களில், புலிகள் யாருக்காக போராட முனைந்தார்களோ அந்த மக்கள், புலிகளை வெறுத்தார்கள், அவர்களின் பல கேள்விகளுக்குப் புலிகளிடம் பதிலில்லை என்று தமிழினி ஆதங்கப்படுகிறார்.

இவரது பள்ளிப் பருவத்தில் பாடசாலைக்கு வரும் இயக்கப் பிரதிநிதிகள், பெரிய வகுப்பு மாணவர்களிடம் கூட்டங்களை நடத்துகிறார்கள். அப்போது, தமிழினி உள்ளிட்ட சிறுவயது மாணவர்களை பொருட்டாக மதிக்காமல் துரத்தியிருக்கிறார்கள். குழந்தைகளை போராட்டத்தில் ஈடுபடுத்துவது குறித்து புலிகளுக்கு இருந்த பொறுப்புணர்ச்சியை இது உணர்த்தவில்லையா?

தமிழினியின் பள்ளிப் பருவத்தில், இந்திய அமைதிப்படை இலங்கைக்கு வருகிறது. அது பற்றி எழுதும் போது தமிழினி, “இந்திய அமைதிப்படை பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதாக பேசிக் கொண்டார்கள் என்கிறார்.

அமைதிப்படை தமிழ்ப் பெண்களிடம் நடந்த விதம் உலகம் அறிந்த உண்மை. ஆனால் தமிழினி தனக்கு எதுவுமே தெரியாதது போல, பேசிக் கொண்டார்கள் என்று மழுப்பலாக எழுதியிருப்பது நெருடலாக உள்ளது.

ஒரு பெண்ணாக மட்டுமல்ல, விடுதலைப் புலி இயக்கப் போராளியாக அமைதிப்படையின் அத்துமீறல்கள் பற்றி மேலதிகத் தகவல்களை அறிந்திருப்பார் தானே? ஆனால் புத்தகத்தில் எங்குமே அதைப்பற்றி பேசவில்லை!!

இந்திய அமைதிப்படை, இவரது பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து பாடசாலை அதிபரை தாக்கியிருக்கிறது. மாணவர்களை வெளியேற்றி, மைதானத்தில் பல மணிநேரம் மண்டியிடச் செய்து கொடுமைப்படுத்தியிருக்கிறது.

இதைக் கூறும் போதும் கூட, இந்திய இராணுவத்தைத் தாக்கி விட்டு ஓடிச்சென்ற விடுதலைப் புலிகளை தேடும் நடவடிக்கையாக அது நடந்தது என்கிறார், தமிழினி. அமைதிப் படைகளால் தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளுக்கும் புலிகளே காரணம் என்று சொல்லாமல் சொல்வதாகவே இதைக் கருத வேண்டியிருக்கிறது.

மாத்தையா மீதான புலிகள் இயக்கத்தின் குற்றச்சாட்டுக்குப் பின், அவர் என்ன ஆனார் என்ற கேள்வியோடு, “ஒரு இறுக்கமான நிறுவனமாகக் கட்டியெழுப்பப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்கம் என்று வர்ணிக்கிறார்.

அத்துடன், இயக்கத்தின் இரகசியங்களை பற்றி கதைப்பதும், எமக்குத் தரப்பட்டிருந்த வேலைகளுக்கு அப்பாற்பட்ட விடயங்களை ஆராய்வதும் போராளிகளின் செய்யத் தகாத காரியங்களாக இருந்தன என்கிறார்.

விடுதலைப் புலிகள் இயக்கம், கெரில்லா இயக்கம் என்பதைக் கடந்து மரபு வழி இராணுவம் என்ற நிலைமையை அடைந்திருந்தது என்று இந்தப் புத்தகத்தில் தமிழினியே ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அப்படியெனில் எந்த நாட்டின் இராணுவத்திலாவது அதில் உள்ள வீரர்கள், அந்த இராணுவத்தின் இரகசியங்களை பேசுவதும், தங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளுக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் தலையிடுவதும் அனுமதிக்கப்படுமா? போராளிகள் அனைவருக்கும் வெளிப்படைத்தன்மையாக இருந்து கொண்டு ஒரு போராட்ட இயக்கத்தை வழிநடத்த முடியுமா? அது சாத்தியமா?

பெண் போராளிகள் நீதிபதிகளாகவும், சட்டவாளர்களாவும், நிதிச் செயல்பாடுகளில் ஈடுபடுவோராகவும் ஊடகப் பிரிவுகளான நிதர்சனம், புகைப்படப் பிரிவு, பத்திரிகை, வானொலி ஆகிய துறைகளில் செயல்படுவோராகவும் இருந்தனர்.

பெண் போராளிகளில் பலர் சிறந்த இலக்கிய கர்த்தாக்களாகவும், ஆயுதப் போராட்டத்துக்கு அப்பால் அரசியல், சமூகம் பற்றிய தளங்களில் பரந்து விரிந்து தேடல் உள்ளவர்களாகவும் இருந்தனர் என்று சொல்லிக் கொண்டே, ஆனாலும் இயக்கத்தின் போராட்டக் கருத்தியலின் எல்லைக்கு வெளியே செல்லாமல், போராட்டத்தின் நியாயங்களை வலுப்படுத்தும் வகையிலேதான் அவர்களது படைப்பாற்றல்களும் வெளிப்படுத்தல்களும் அமைந்திருந்தது என்று குற்றம் சாட்டுகிறார்.

தமிழினி என்ன சொல்ல வருகிறார்? ஓர் அமைப்பில் உள்ள நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் அந்த இயக்கத்தின் கருத்தியலோடு சம்பந்தப்பட்டவர்கள் இல்லையா?

2004 -ம் ஆண்டு சுனாமியின் போது நடந்த நிவாரணப் பணிகள் குறித்து பேசுகிறார். போர் நிறுத்தம் அமுலிலுள்ளது. அப்போது கிளைமோர் தாக்குதலில் ஒரு ஆண் பொறுப்பாளர் உயிரிழந்ததுடன், பெண் போராளி பலத்த காயமடைகிறார்.

சுனாமி நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த அரசியல் துறை பொறுப்பாளர் கௌசல்யன் மற்றும் அம்பாறை தமிழ் எம்பி சந்திரநேருவும் கொல்லப்படுகிறார்கள். அவர்களுடன் போராளிகள் சிலரும் உயிரிழந்திருக்கிறார்கள்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் நல்வாய்ப்பாக தமிழினி உயிர் பிழைத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து ஆட்டோவில் சென்ற மூன்று பெண் போராளிகள் சுடப்படுகிறார்கள். அவர்கள் கொழும்பு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு உயிர் பிழைக்கிறார்கள்.

மேற்கண்ட தாக்குதல்கள், போர் நிறுத்த நேரத்தில் சுனாமிக்குப் பின்னர் நடந்து கொண்டிருந்த நிவாரணப் பணிகளின் போது போராளிகள் மீது நடத்தப்பட்டன. இவ்வளவையும் கூறிவிட்டு, இலங்கைத் தீவில் போரா சமாதானமா என்பதைத் தீர்மானிக்கக் கூடிய சக்தி மிக்க மனிதராகத் திகழ்ந்தார் பிரபாகரன் என்கிறார்.

மேற்கண்ட சம்பவங்களில், போர் நிறுத்த உடன்படிக்கையை மீறிய இலங்கை இராணுவம் பற்றி புத்தகம் முழுக்க எந்த இடத்திலும் தமிழினி பதிவு செய்யவில்லை என்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

பிரபாகரனின் மகன் சார்லஸ் அன்டனி, இறுதிக்கட்டப் போரின் போது கட்டாய ஆள் சேர்ப்பில் ஈடுபட்டதை தவறான நிலைப்பாடு என்று சொல்கிறார். அப்போது, கட்டாய ஆள் சேர்ப்பு வேலையை தமிழினி செய்ய மறுத்திருக்கிறார். உடனே அந்தப் பணியிலிருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

கட்டாய ஆள் சேர்ப்பு தவறான முடிவு என்றாலும் கூட, அதை எதிர்த்த தமிழினிக்கு அந்தப் பணியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதை பக்குவப்பட்ட ஜனநாயக நடவடிக்கையாகத்தான் பார்க்க முடிகிறது.

இறுதிக்கட்டப் போரின் தொடக்க காலத்தில், செஞ்சோலை பள்ளி வளாகத்தில் பள்ளிக் குழந்தைகள் மீதான இராணுவத்தின் தாக்குதலை மறக்க முடியுமா? 50க்கும் அதிகமான பள்ளி மாணவிகள் அதில் உயிரிழந்தனர் என்று சொல்லும் தமிழினி, அங்கேயும் விடுதலைப் புலிகளையே குற்றம் சுமத்துகிறார்.

மாணவர்களுடைய பாதுகாப்பைப் பற்றிய போதிய திட்டமிடல் இல்லாததால் இந்த அவலம் நேர்ந்ததாக சொல்கிறார். இராணுவத்தினர் பள்ளிக் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தியிருக்கக் கூடாது என்று ஒரு வார்த்தை கூட தமிழினி பதிவு செய்யவில்லை.

இறுதிக் கட்டப் போரின் போது, அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ்ச் செல்வன் கொல்லப்பட்ட பின் பொறுப்பேற்ற நடேசன், தமிழ்நாட்டு ஈழ ஆதரவு தலைவர்களுடன் நெருக்கமாக இருந்ததைக் குறிப்பிட்டு, 2009-ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா முதல்வர் ஆனதும், மைய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம், இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையே உடனடியாக போர் நிறுத்தம் ஏற்படும் என்ற கருத்து புலிகளிடம் ஏற்படுத்தப்பட்டிருந்ததாகக் கூறுகிறார். இந்தக் கருத்தில் தனக்கு நம்பிக்கை இருக்கவில்லை என்றும் தமிழினி கூறுகிறார்.

யாருக்குத்தான் இருக்கும்? ஏனெனில், இந்தியாவில் 2009-ம் ஆண்டு நடந்தது நாடாளுமன்றத் தேர்தல். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அல்ல. இந்தத் தேர்தலில் ஜெயலலிதா முதல்வர் ஆவது சாத்தியமா? அதேபோல் முத்துக்குமார், செங்கொடி உறவுகளின் தீக்குளிப்புத் தியாகங்களும் இந்திய அரசின் கவனத்தைத் திருப்பும் என எதிர்பார்க்க முடியவில்லை என்று சொல்கிறார்.

முத்துக்குமார் போர் நிறுத்தம் வேண்டி தீக்குளித்தார் என்பது சரி. முள்ளிவாய்க்கால் பேரவலம் அரங்கேறிய ஓரிரு ஆண்டுகளுக்குப் பின், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளனை தூக்கில்போட எதிர்ப்புத் தெரிவித்து தீக்குளித்தவர் செங்கொடி. செங்கொடிக்கும் போர் நிறுத்தத்திற்கும் என்ன சம்பந்தம்?

இதுபோன்ற தவறான தகவல்களை எப்படி எடுத்துக் கொள்வது? இந்தியா-தமிழ்நாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் உள்ள தவறுகளை உறுதியாக நம்மால் சுட்டிக்காட்ட முடிகிறது. அப்படியென்றால் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிற விஷயங்களில் இன்னும் என்னென்ன தகவல்கள் தவறுதலாக இருக்கிறதோ?

2009 மே மாதம், போரின் இறுதி நாட்களில் கடற்புலி தளபதி ஸ்ரீராமை சந்தித்தாகவும், அவர் மனைவி இசைப்பிரியாவுக்காக காத்திருந்ததாகவும் தமிழினி கூறியிருக்கிறார். அதன்பின்பு இசைப்பிரியாவுக்கு ஏற்பட்ட கதி நம் எல்லோரும் அறிந்ததே. ஆனால் அதைப் பற்றி புத்தகத்தில் வேறு எங்கேயும் தமிழினி பேசவில்லை என்பது மிக வருத்தப்படக் கூடிய செய்தி.

மே பதினாறாம் தேதி தமிழினியும் சில போராளிகளும் வெளியேறுகிறார்கள். முல்லைத்தீவு மைதானத்தில், இலங்கை இராணுவத்தின் முன்பு மக்களோடு மக்களாக இவரும் பிற போராளிகளும் அமர்ந்திருக்கிறார்கள். அப்போது இராணுவத்தினர் தண்ணீர் போத்தல்களும் உணவுப் பொட்டலங்களும் வழங்குகின்றனர். சரணடந்தால் என்ன நடக்குமோ என போராளிகள் பயந்திருக்கும் போது, இராணுவத்தினர் மும்முரமாக மக்களுக்கான தேவைகளைக் கவனிப்பதில் ஈடுபட்டிருந்தனர் என்கிறார், தமிழினி!!

இராணுவத்தினர் பற்றி தமிழினி கூறுவது உண்மையாகவே இருக்கட்டும். ஆனால் அந்த இறுதி நாட்களில் இசைப்பிரியா போன்ற பெண் போராளிகள் பலருக்கும் ஏற்பட்ட அவலத்திற்கு இலங்கை இராணுவம் காரணம் இல்லையா? அது பற்றி தமிழினி சொல்லாமல் சாதாரணமாகக் கடந்து செல்வது அறமா?

இதை எல்லாவற்றிற்கும் மேலாக “நந்திக் கடல் நீரேரியை சிறு படகு மூலம் கடந்து தப்பிச் செல்ல பிரபாகரன் திட்டமிட்டு இருந்ததாக கூறுகிறார். அத்துடன், தோல்வியைக் கற்பனை செய்தபடிதான் தலைவர் இறுதி யுத்தத்தை ஆரம்பித்தாரோ என்று தமிழினி தன் சந்தேகத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மே 19-ம் தேதி தமிழினி, பொதுமக்களோடு மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த நேரத்தில், நந்திக்கடல் பகுதியில் பிரபாகரனின் உடல் கிடைத்ததாக புகைப்படம் வெளியான செய்தித்தாளைக் காட்டிய தமிழ் இளைஞர்(!), உங்கள் தலைவர் செத்துப் போனார். எல்லோரும் அழுங்கோ என்று கேலி செய்து அழுது காட்டியதாக சொல்கிறார்.

தமிழினி சொல்வது போல, அல்லது கேள்விப்பட்டது போல பிரபாகரனுக்கு போரின் முடிவு முன்னரே தெரிந்திருக்கும் பட்சத்தில், நந்திக் கடல் வழியாக தப்பிச் செல்ல திட்டமும் இருந்திருக்கும் பட்சத்தில், பேரழிவுக்கு முன்பாக அவர் எளிமையாக தப்பித்திருக்க முடியுமே? குறைந்த பட்சம் அவரது குடும்பத்தாரையாவது தப்பிப் பிழைக்கச் செய்திருக்க முடியுமே? பாலச்சந்திரனுக்கு இந்தக் கதி ஏற்பட்டிருக்காதே?!

தமிழினி, “பிரபாகரனுடைய விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ற தீர்மானங்களின் படி இயக்கம் வழிநடத்தப்பட்டது இத்தகைய இனஅழிவை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார். இந்த வார்த்தைகள் மூலம், தமிழின அழிப்பை செய்தது, இலங்கை இராணுவம் அல்ல பிரபாகரன் என்று தமிழினி நிறுவ முயல்கிறார்.

ஒட்டுமொத்த இயக்கத்தின் மீதும் குறைகளை அடுக்கிக் கொண்டே செல்லும் தமிழனி, இலங்கை இராணுவத்தைப் பற்றி கூறும்போது, சுனாமியின் போது நிவாரணப் பணிகளை சிறப்பாகச் செய்தார்கள் தஞ்சமடைந்த தமிழ் மக்கள், சரணடைந்த போராளிகள் ஆகியோரை நல்ல முறையில் நடத்தினார்கள் என்று நற்சான்றிதழ் வழங்கியிருக்கிறார்.

இதற்கு அவர்கள் தகுதியானவர்களாகவே இருக்கட்டும். ஆனால் சுட்டிக்காட்ட அவர்களிடம் எந்தத் தவறுமே இல்லை என்று தமிழினி நினைத்து விட்டார் போலும்!! அதை வாசகனையும் நம்ப வைக்க முயற்சி செய்திருக்கிறார்.

சரணடைந்த பின்பு, நாட்டின் விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய பெண்களின் நிலை இன்று சமூகத்தில் எவ்வளவு மோசமானதாக ஆகிவிட்டது. ஒரு நாள் உயிர் தப்பி வந்த குற்றத்திற்காக ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைக்கும் துன்பத்தை அனுபவிக்க வேண்டியதாகவே இருக்கிறது என்று தமிழினி தன் இறுதி நாட்களில் வேதனைப்பட்டுச் சொல்லியிருக்கிறார்.

உண்மைதான். நாட்டின் விடுதலைக்காக ஆயுதமேந்தி போராடிய குற்றத்திற்காக இன்னும் எத்தனை எத்தனை குற்றச்சாட்டுகளுக்கு பிரபாகரனும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் ஆளாக நேரிடுமோ?

ஒரு கூர்வாளின் நிழலில் புத்தகத்தின் பின் அட்டையில், தமிழினி கூறியதாக வெளியான கருத்தை சொல்லியே இந்தக் கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

இயக்கத்தின் தவறுகள் ஒரு போராட்டத்தின் நியாயத்தை முடக்கிவிட முடியாது!

-வே.வெற்றிவேல் சந்திரசேகர்