2009ன் பின் இதுவரை 313 தற்கொலை அங்கிகள் மீட்பு!
யுத்தம் நிறைவடைந்து இதுவரை 313 தற்கொலை அங்கிகளும் லட்சக்கணக்கில் ஆயுதங்கள் மற்றும் வெடி குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவை பற்றி பெரிதுபடுத்தாத ஊடகங்கள் சாவகச்சேரியில் மீட்ட தற்கொலை அங்கிக்கு முக்கியத்துவமளிப்பது விந்தையாகவுள்ளதென்றும் பதில் நிதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் இத்தகவல்களை பகிரங்கமாக வெளியிட்ட அமைச்சர் நாட்டின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு ஊடகங்கள் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் பகிரங்கமாகக் கேட்டுக்கொண்டார்.
அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
தற்கொலை அங்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளே இன்னும் நிறைவுறாத போது அது ஒரு புதிய அங்கி என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
2009 ஆம் ஆண்டு முதல் இதுவரை பெருமளவு தற்கொலை அங்கிகள் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதற்கிணங்க 313 தற்கொலை அங்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2,26,719 வெடி குண்டுகள் 46லட்சத்துக்கு மேற்பட்ட ரவைகள், 1,76,000ற்கும் மேற்பட்ட வெடிபொருட்கள், 8937 ஆயுதங்கள் யுத்தத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவற்றுக்கு வழங்கப்படாத முக்கியத்துவம் தற்போது மீட்கப்பட்ட ஒரேயொரு தற்கொலை அங்கிக்கு வழங்கப்படுவதே விந்தையாகவுள்ளது.எந்த அரசாங்கம் பதவியில் இருந்தாலும் தேசிய பாதுகாப்பு மிக முக்கியமாகிறது.
இந்த விவகாரத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் முக்கியத்துவமளித்து விசேட அறிக்கையொன்றை விடுத்து இதனோடு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து தண்டனை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தே இந்த அறிவிப்பை விடுத்தார் என்பது முக்கியமானது.
இத்தகைய அறிக்கைகளுக்கு ஊடகங்கள் எந்த முக்கியத்துவமுமளிக்கவுமில்லை. வடக்கிலும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் நாம் அமைதி சமாதானத்தை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறோம். கடந்த காலங்களைப் போன்று மோசமான சம்பவங்கள் இடம்பெறாமல் பாதுகாப்பது அனைவரதும் கடமை.
அடிப்படை வாதிகள் பல்வேறு விமர்சனங்களை வெளியிடலாம். அவர்கள் இது குறித்து வித்தியாசமான கருத்துக்களை வெளியிட்டு குழப்பப் பார்க்கின்றனர். அதற்கு உந்துதலளிப்பது சிறந்ததல்ல.
2009 ல் நாம் பெற்றுக்கொண்ட அமைதியை அடிப்படையாகக் கொண்டு இக்காலத்தில் அதனூடான வெற்றிகளை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.