Breaking News

44 வருடங்களின் பின்னர் அரசியலமைப்பு சபையாக இன்று பாராளுமன்றம் கூடுகிறது

பாராளுமன்றம் இன்று (05) அரசியலமைப்பு சபையாக கூடுகிறது. கடந்த 44 வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றம் இவ்வாறு அரசியலமைப்பு சபையாக கூடியுள்ளது. இது 1972 ஆம் ஆண்டில் ஆகும் என பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இன்றைய சபை அமர்வின் போது, அரசியலமைப்பு சபைக்காக 7 உப தலைவர்கள் தெரிவு செய்யப்பட இருப்பதோடு, அதன் நடவடிக்கைகளுக்காக, குழுவுக்கு 21 உறுப்பினர்கள் தெரிவாக இருப்பதாக பாராளுமன்ற உதவி செயலாளர் நாயகம் ரோஹனதீர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றம் இன்று சபாநாயகர் கரு ஜெயசூரியவின் தலைமையில் பிற்பகல் 1.00மணிக்கு கூடுகிறது. வாய்மூல விடைக்கான கேள்வி பதிலை தொடர்ந்து பிற்பகல் 2.00 மணிக்கு பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படும்.

பிற்பகல் 2.00 மணிக்கு பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக கூட இருப்பதோடு புதிய அரசியலமைப்பு சபையாக பாராளுமன்றம் கூடி புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவது தொடர்பாக சபாநாயகர் இதன் போது விளக்கமளிக்கவுள்ளார். அதனை தொடர்ந்து பிரதமரும் கட்சித் தலைவர்களும் உரையாற்ற இருப்பதாகவும் செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.