Breaking News

திருக்கேதீஸ்வரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கிணறு தோண்டும் நடவடிக்கை தோல்வி

மன்னார் - திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழிக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட கிணற்றை தோண்டும் நடவடிக்கைகள் நேற்று கைவிடப்பட்டுள்ளன.

நேற்று திங்கட்கிழமை மன்னார் நீதவான் ஏ.ஜீ. அலெக்ஸ்ராஜா முன்னிலையில் கிணறு தோண்டும் நடவடிக்கைகள் இடம்பெற்ற போதும், அரச சட்ட வைத்திய அதிகாரி சமூகமளிக்காததன் காரணத்தினால் அந்த நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ளன.

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட கிணறு தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று மன்னார் நீதிமன்றத்தில் மன்னார் நீதவான் ஏ.ஜீ. அலெக்ஸ்ராஜா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் குறித்த கிணறு மன்னார் நீதவான் முன்னிலையில் தோண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக அரச திணைக்களத்தில் இருந்து 13 நிறுவனங்களில் இருந்து உரிய அதிகாரிகள் மனித புதைகுழி தோண்டும் பகுதிக்கு சென்றிருந்தனர். அத்துடன் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தனர்.

அடையாளம் காணப்பட்ட குறித்த கிணற்றை மன்னார் நீதவான் ஏ.ஜீ. அலெக்ஸ்ராஜா பார்வையிட்டதோடு, நீதவான் முன்னிலையில் தோண்டுவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

எனினும், அரசாங்க சட்ட வைத்திய அதிகாரிகள் கொழும்பில் இருந்தும், மன்னாரில் இருந்தும் வருகை தராமையினால் கிணறு தோண்டும் பணியினை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் மன்னார் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை மாலை 2 மணியளவில் இந்தவிடயம் குறித்து கலந்துரையாடுவதற்கு தவணையிட்டிருந்தது.

குறித்த கலந்துரையாடலில் அரசாங்க திணைக்கள அதிகாரிகளாக அழைக்கப்பட்ட அரச பகுப்பாய்வாளர் திணைக்களம், தொல் பொருள் திணைக்களம், குண்டு வெடிப்பு பிரிவினர், மன்னார் பொலிஸார் உட்பட பல திணைக்கள அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது, மன்னார் நீதவான் எ.ஜீ. அலெக்ஸ்ராஜா முன்னிலையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது. எதிர்வரும் 29 ஆம் திகதி குறித்த புதைகுழி தொடர்பாக அழைக்கப்பட்ட அரச திணைக்கள பிரதிநிதிகள் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் முன்னிலையில் விசேட கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு அதனைத் தொடர்ந்து குறித்த கிணறு தோண்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் கலந்துரையாடப்பட்டது.

எதிர்வரும் 29 ஆம் திகதி காலை 11 மணிக்கு மன்னார் நீதிமன்றத்தில் இடம்பெறும் விசேட கலந்துரையாடலைத் தொடர்ந்து குறித்த கிணறு தோண்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.